5 உயிர்களை பலியெடுத்த பெலியத்தை துப்பாக்கி சூடு: முதலாவது சந்தேக நபர் சிக்கினார்

OruvanOruvan

Beliatta murders

பெலியத்தை பகுதியில் ஐந்து பேர் சுட்டுக் கொள்ளப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம்

பெலியத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஹவத்தை பாலத்துக்கு அருகில் கடந்த திங்கட்கிழமை (22) காலை 08.30 மணியளவில் அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கிச் சூட்டினை முன்னெடுத்தனர்.

கஹவத்தை அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயில் பாலத்துக்கு அருகில் திங்கட்கிழ‍ைமை காலை வெள்ளை நிற டிபென்டர் வாகனத்தில் வருகை தந்த ஐவர் பாலத்துக்கு அருகில் இருந்த வர்த்தக நிலையத்தில் பொருட்களை வாங்குவதற்காக வாகனத்தை நிறுத்தியுள்ளனர்.

இதன்போது, ஜூப் வாகனத்தில் வருகை தந்த அடையாளம் தெரியாத நபர்கள் டிபென்டர் வாகனத்தில் வந்த ஐவரை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளனர்.

இதனால் வர்த்தக நிலையத்துக்குள் சென்றவர்களும், வர்த்தக நிலையத்துக்கு வெளியில் இருந்தவர்களும் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகினர்.

இதன்போது சம்பவ இடத்தில் நால்வர் உயிரிழந்ததுடன், படுகாயமடைந்த நிலையில் ஒருவர் தங்காலை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர்களின் விபரம்

சம்பவத்தில் 34 வயதான பெந்தோட்ட சமிர மதுசங்க, 40 வயதான இந்துருவ அசித சின்சுக, 37 வயதான குருணாகல் புத்திக ராஜபக்ஷ, 44 வயதான தெமட்டகொட சம்பிக ஜயதிலக்க மற்றும் 48 வயதான குருணாகல் சமன் பிரசன்ன பெரேரா ஆகியோரே உயிரிழந்தமை உறுதிபடுத்தப்பட்டது.

சம்பவத்தின் பின்னணி

கடந்த 2022 ஜூலை 22 ஆம் திகதி தங்காலை பகுதியில் இடம்பெற்ற மனிதப் படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு அடைக்கலம் வழங்கிய குற்றச்சாட்டில் "அபே ஜன பலய" கட்சியின் தலைவர் சமன் பெரேரா 2022 ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த சம்பவத்துக்கும் துப்பாக்கிச் சூட்டுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதாக என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் முன்னைய கருத்து

சமன் பெரேரா உட்பட ஐவர் தங்காலை நீதிமன்றத்துக்கு வழக்கு நடவடிக்கைகளுக்கு முன்னிலையாவதற்காக சென்று கொண்டிருந்த வேளையில் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ குறிப்பிட்டார்.

ஜூப் ரக வாகனத்தில் வந்த இரு நபர்களில் ஒருவர் நால்வர் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதுடன், பிறிதொரு நபர் டிபென்டர் வாகனத்தின் சாரதி மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

சம்வத்துக்கு ரி56 ரக துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், சம்பவ இடத்தில் இருந்து 36 வெற்றித் தோட்டக்காளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறியிருந்தார்.

சந்தேக நபர்களின் வாகனம் மீட்பு

துப்பாக்கி சூடு சம்பவத்துடன் தொடர்புடைய வாகனத்தை மீட்டுள்ளதாக பொலிஸார் இன்று (24) தெரிவித்துள்ளனர்

காலி வித்யாலோக பிரிவேனாவிற்கு முன்பாக உள்ள வாகன தரிப்பிடத்தில் இந்த SUV வாகனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மாத்தறையில் இருந்து வந்த விசேட பொலிஸ் குழுவினால் வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது.

முதல் சந்தேக நபர் கைது

துப்பாக்கி சூட்டுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் இன்று (24) தெரிவித்துள்ளார்.

கைதான சந்தேக நபர் 54 வயதுடைய சமன் குமார என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் மாத்தறை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது சந்தேகநபர் SUV வாகனத்தை ஓட்டிச் சென்றதுடன் கொலைகளைத் திட்டமிட்டுள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந் நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.