பெண்ணின் தலையை குறிவைத்து தாக்கிய சிறுத்தை: பலத்த காயங்களுடன் பெண் வைத்தியசாலையில்
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லெமலியர் தோட்டத்தில் பெண் தொழிலாளி ஒருவர் சிறுத்தை தாக்குதலுக்கு இலக்காகி பலத்த காயங்களுடன் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் லெமலியர் தோட்டத்தை சேர்ந்த பி.சத்தியவாணி (வயது 36) என்பவர் சிறுத்தை தாக்கி பலத்த காயமடைந்துள்ளார்.
புதன்கிழமை (24) பிற்பகல் 1.30 மணியலவில் இடம்பெற்றுள்ள இந்த சம்பவத்தில் சிறுத்தை தாக்குதலில் பலத்த காயங்களுக்கு உள்ளான லெமலியர் தோட்ட பெண் தொழிலாளி பெண் தலவாக்கலை -நுவரெலியா பிரதான வீதியின் லிந்துலை நகரை அண்மித்த தேயிலை தோட்டத்தில் பணியில் ஈடுப்பட்டிருந்த வேளையில் தேயிலை மலையில் பதுங்கியிருந்த சிறுத்தையே தாக்கியுள்ளது.
கொழுந்து பறித்துக்கொண்டிருந்த போது, அச்சிறுத்தை அப்பெண்ணின் தலையை குறிவைத்து தாக்கியதாக அறியமுடிகின்றது.
அதேநேரத்தில் அருகில் தொழில் செய்துகொண்டிருந்த சக தொழிலாளிகள் கூச்சலிட்டு சிறுத்தையை துரத்தியதுடன் காயங்களுக்கு உள்ளான தொழிலாளி பெண்னை மீட்டு லிந்துலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பின் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.