தலைவர் கொலை செய்யப்பட்டுள்ளார்: நாங்கள் அச்சத்தில் இருக்கின்றோம்-டேன் பிரியசாத்
பெலியத்தையில் கொல்லப்பட்ட எமது மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சமன் பெரேரா உட்பட 5 பேர் கொலை செய்யப்பட்டதன் பின்னணியில் பாதாள உலகக்குழு இருக்கலாம் என சந்தேகிப்பதாக டேன் பிரியசாத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், இந்த நிலைமை காரணமாக தான் உட்பட சாதாரண மக்கள் அச்சமடைந்துள்ளதாக கூறியுள்ளார்.
எமது மக்கள் சக்தி கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அத்துரலியே ரதன தேரர் உட்பட அனைத்து பௌத்த பிக்குகளும் அரசியலில் இருந்து விலக வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
எமது மக்கள் சக்தி கட்சியின் தலைவர் நேற்று கொலை செய்யப்பட்டார். பாதாள உலகக்குழுக்கள் தலைத்தூக்கியுள்ளன. எமது மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட தலைவராக நானே கடமையாற்றினேன். எமக்கு பயமாக இருக்கின்றது.
யுக்தி நடவடிக்கையையும் மீறி பாதாள உலகக்குழுக்கள் தலைத்தூக்கி வருகின்றன. பதில் பொலிஸ் மா அதிபர் இது குறித்து ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
இப்படியான செயல்கள் மூலம் யுக்தியை நடவடிக்கைகளை சீர்குலைக்க முயற்சித்து வருகின்றனர். இது பாதாள உலகக்குழுவின் செயலா என விசாரணை நடத்தி நியாயத்தை நிறைவேற்றுங்கள்.
நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.சட்டத்தரணிகளால் நாட்டுக்கு பிரயோசனம் இல்லை எனவும் டேன் பிரியசாத் குறிப்பிட்டுள்ளார்.