இலங்கையின் தடையால் மாலைத்தீவு செல்லும் சீன ஆய்வு கப்பல்கள்: இந்திய பெருங்கடலில் அதிகரிக்கும் பதற்றம்

OruvanOruvan

இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீன ஆராய்ச்சிக் கப்பல்கள் நிலைநிறுத்தப்படுவதில் நிலையான அதிகரிப்பு ஏற்பட்டு வருவது குறித்து இந்தியா கவலை தெரிவித்துள்ளது.

மாலைத்தீவில் இந்திய துருப்புக்களை நிலைநிறுத்துவது தொடர்பாக இந்தியாவிற்கும் மாலைத்தீவிற்கும் இடையே தொடர்ந்து முறுகல்கள் நிலவி வரும் நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியா - மாலைத்தீவு இடையில் அதிகரிக்கும் முறுகல்

சீன ஆராய்ச்சிக் கப்பல் Xiang Yang Hong 03 இந்தியப் பெருங்கடலுக்குள் நுழைந்து மாலைத்தீவுக்குச் செல்வதாக ஓபன் சோர்ஸ் இன்டலிஜென்ஸ் (OSINT) மற்றும் கடல்சார் கண்காணிப்பு இணையதளங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவும் அமெரிக்காவும் கடந்த இரண்டு வருடங்களாக, சீனக் கப்பல்கள் இலங்கையின் துறைமுகங்களுக்கு ஆராய்ச்சி நோக்கங்களுக்காக வருகை தருவது குறித்து இலங்கை அதிகாரிகளிடம் கவலை தெரிவித்திருந்தன.

OruvanOruvan

XIANG YANG HONG 03 கப்பல் 2023 டிசம்பரில் கொழும்பு கடற்பரப்பிற்கு வருகை தர இருந்தது. இலங்கையை அண்டிய கடற்பரப்பில் வெளிநாட்டு ஆராய்ச்சிக் கப்பல்கள் ஆய்வுகள் மேற்கொள்ள ஒருவருடம் தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து சீனாவின் கவனம் மாலைத்தீவை நோக்கி திரும்பியுள்ளது.

பிராந்திய பதற்றமாக உருவாகலாம்

மாலைத்தீவுக்கும் இந்தியாவுக்கும் அதிகரித்துள்ள பதற்றமான சூழ்நிலைக்கு பின்புலத்திலேயே சீனாவின் ஆய்வுக் கப்பல்களும் இந்திய பெருங்கடல் பகுதியின் ஊடாக மாலைத்தீவு நோக்கி தமது பயணங்களை மேற்கொள்கின்றன.

இந்திய பெருங்கடல் பகுதியில் சீன ஆராய்ச்சிக் கப்பல்களின் பயணத்தில் நிலையான அதிகரிப்புகள் ஏற்பட ஆரம்பித்துள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்திய பெருங்கடல் பகுதியை மையமாக கொண்டு சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ளதால் எதிர்காலத்தில் இந்த விடயம் பிராந்திய பதற்றத்துக்கு வழிவகுக்கக் கூடும் என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

லட்சத்தீவு விவகாரத்தை தொடர்ந்து இந்தியா மற்றும் மாலைத்தீவுக்கு இடையிலான இராஜதந்திர உறவுகளில் முறிவு ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.