மதுபான சாலைக்குள் அத்துமீறிய பொலிஸார்: மூன்று ஊழியர்கள் கைது, வைரலாகும் காணொளி

OruvanOruvan

Wine shop

பாணந்துறை பின்வத்தை பிரதேசத்தில் மதுபான விற்பனைச் சாலையொன்றுக்குள் சட்டவிரோதமாக அத்துமீறி நுழைந்த பொலிஸார், அங்கிருந்து ஏராளம் மதுபானப் போத்தல்கள் மற்றும் சிகரட் என்பவற்றை எடுத்துச் சென்றுள்ளனர்.

அங்குள்ள மதுபானச் சாலையொன்றுக்குள் ஜன்னல் ஊடாக அத்துமீறிப் பிரவேசிக்கும் பொலிஸார், அங்கிருந்து ஏராளம் மதுபானப் போத்தல்களையும் சிகரட்டுகளையும் எடுத்துச் செல்லும் சீசிடிவி காணொளிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

இந்நிலையில் சம்பவம் குறித்து கருத்து வௌியிட்டுள்ள பொலிஸார், குறித்த மதுபானச் சாலை சட்டவிரோதமாக செயற்படுவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் மதுபானச் சாலையின் மூன்று ஊழியர்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். நீதிமன்றம் அவர்களைப் பிணையில் விடுவித்துள்ளது

எனினும் சட்டபூர்வ அனுமதி பெற்ற மதுபானச் சாலையொன்றுக்குள் புகுந்து பொலிஸார் அவ்வாறு மதுபானப் போத்தல்களை எடுத்துச் செல்ல எதுவித அதிகாரமும் இல்லை என்று கலால் திணைக்கள அதிகாரிகள் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர்.

அவ்வாறான சட்டபூர்வ மதுபானச் சாலைகள் தொடர்பான சகல செயற்பாடுகளும் தமது அதிகாரத்துக்கு உட்பட்டது என்றும், பொலிஸார் இந்த விடயத்தில் அத்துமீறி நடந்திருப்பதாகவும் கலால் திணைக்கள அதிகாரிகள் தொடர்ந்தும் குற்றம் சாட்டியுள்ளனர்.