14 தமிழ் அரசியல் கைதிகள் மட்டுமே சிறையில் இருக்கின்றனர்: நீதி அமைச்சரின் தகவலும், ஆர்வலர்களின் கேள்விகளும்

OruvanOruvan

14 தமிழ் அரசியல் கைதிகள் மட்டுமே தற்போது சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ள நிலையில், வெளிப்படைத்தன்மைக்கான கோரிக்கைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் வடக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்த நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச, ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன், அரசியல் கைதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல்காரர்களை கைது செய்வதை நோக்கமாகக் கொண்ட யுக்திய நடவடிக்கை குறித்தும் பேசியிருந்தார்.

போதைப் பொருள் வியாபாரிகளை கட்டுப்படுத்தும் மூலோபாய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். யுக்திய நடவடிக்கைகள் மூலம் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும் எனவும் அமைச்சர் கூறியிருந்தார்.

அத்துடன், யுக்திய நடவடிக்கையின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை செய்ய ஓய்வுபெற்ற நீதியரசர் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், யுக்திய நடவடிக்கைகள் மூலம் கைது செய்யப்படுபவர்களை தடுத்து வைக்கும் பிரதான இடமாக கந்தக்காடு புனர்வாழ்வு மையம் காணப்படுகின்றது. இதில் 500 பேர் வரையில் தடுத்து வைக்கமுடியும்.

இந்நிலையில், கைதிகளின் வருகைக்கு ஏற்ப இந்த இடங்களில் வசதிகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது தொடர்பில் மனித உரிமை ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் அரசியல் கைதிகள் தொடர்பான அமைச்சரின் கூற்று, நீதிமன்ற வழக்குகளில் 14 அரசியல் கைதிகள் மட்டுமே இருப்பதாகக் கூறுவது, அரசியல் கைதிகளின் வரையறை மற்றும் சட்ட நடவடிக்கைகளின் வெளிப்படைத்தன்மை குறித்து கேள்விகளை எழுப்புவதாக ஆங்கில ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

எத்தனை பேர் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவில்லை, ஆனால் சட்டத்தின் கீழ் நூற்றுக்கணக்கான தமிழ் அரசியல் கைதிகள் இலங்கை சிறைகளில் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.