ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட நிர்வாண புகைப்படங்கள் - 8 ஆயிரம் சைபர் குற்றங்கள்: பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சபையில் தெரிவிப்பு

OruvanOruvan

Tiran Alles

2023 ஆம் ஆண்டு ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட நிர்வாண புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளதுடன், 8 ஆயிரம் சைபர் குற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் மீதான விவாதத்தின் போதெ அமைச்சர் இந்த விடயத்தை தெரிவித்தார். அத்துடன், கடந்த சில வாரங்களில் மாத்திரம் 500 இற்கும் மேற்பட்ட நிர்வாண புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, இணையவழி பாலியல் துஷ்பிரயோகம் கடந்த ஆண்டு 6,690 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், இவை முறைப்பாடு பதிவு செய்யப்பட்டவை மாத்திரம் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையில், நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் இணையவழி குற்றங்களை மாத்திரம் உள்ளடக்கியது எனவும், மத மற்றும் இன நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நடவடிக்கைகளை தடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, சிவில் அமைப்புகள், ஐக்கிய நாடுகள் வதிவிட பிரதிநிதி மற்றும் ஆசியக் கூட்டமைப்பினால் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள் பின்னர் பரிசீலிக்கப்படும் எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் உறுதியளித்துள்ளார்.