சமன் பெரேராவின் கொலையுடன் கொஸ்கொட சுஜீவ குழுவுக்கு தொடர்பு: பல கோணங்களில் விசாரணை நடத்தும் பொலிஸார்

OruvanOruvan

Saman Perera murder

பெலியத்தையில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் கொல்லப்பட்ட எமது மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சமன் பெரேரா உட்பட 5 பேரின் கொலைகளுடன் கொஸ்கொட சுஜீவவின் பாதாள உலகக்குழுவினருக்கு தொடர்பு இருப்பது ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளதாாக விசாரணைப் பிரிவினர் ரெிவித்துள்ளனர்.

தங்காலை குடாவெல்லையில் நடந்த மூன்று பேரின் கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் கொஸ்கொட சுஜீவ தலைமையிலான பாதாள உலகக்குழு இந்த கொலைகளை திட்டமிட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

ரோயல் பீச் சமன் பெரேரா, தற்போது வெளிநாட்டில் பதுங்கி இருக்கும் கொஸ்கொட சுஜீவவின் பிரதான எதிரி எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக தென் மாகாண விசேட குற்றவியல் விசாரணைப் பிரிவினர் விசாரணை நடத்தி வருவதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில், பொலியத்த-கஹவத்த நுழைவு வாயிலுக்கு அருகில் நேற்று காலை 8 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது.

ரோயல் பீச் சமன் என அழைக்கப்படும் சமன் பெரேரா உள்ளிட்டோர் தங்காலை நீதிமன்றத்தில் முன்னிலையாவதற்காக சென்றுக்கொண்டிருந்த போது இந்த கொலை சம்பவங்கள் நடந்துள்ளன.

புரோடா வாகனத்தில் சென்ற சிலர், டிப்பெண்டர் ஜீப் வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த சமன் பெரேரா உள்ளிட்டோர் மீது துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டை நடத்துவதற்காக சென்ற புரோடோ வாகனம் இமதுவ வழியாக அதிவேக நெடுஞ்சாலைக்குள் பிரவேசித்துள்ளது.

இந்த சம்பவத்தில் சமன் பெரேரா உட்பட நான்கு பேர் அதே இடத்தில் உயிரிழந்தனர். மற்றுமொரு படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

ஹசித ரணசிங்க, சமீர மதுசங்க, புத்திக ராஜபக்ச மற்றும் தெமட்டகொட சம்பிரிய ஜயதிலக்க ஆகியோர் இந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட ஏனைய நபர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தென் மாகாணத்தில் பாதாள உலகக்குழுக்களுடன் சம்பந்தப்பட்ட பல கொலை தொடர்பில் குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கிய சமன் பெரேரா, பிரதேசத்தில் பாதாள உலகக்குழு ஒன்றின் சர்ச்சைக்குரிய நபர். அத்துடன் இந்துருவ ரோயல் பீச் ஹோட்டலின் உரிமையாளர். இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு குடாவெல்ல பிரதேசத்தில் நடந்த கொலையுடன் தொடர்புடைய நபருக்கு உதவிய குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர.

பலப்பிட்டி பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ஸ்டென்லி தாப்ரூ, அவரது மகன் டெரி தாப்ரூ ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்,இந்துருவ சமன் என்பவரின் கொலையுடன் சமன் பெரேராவுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சுமத்தப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று நடந்த மேற்படி கொலை சம்பவம் தொடர்பாக ஆறு பொலிஸ் குழுக்கள் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.