தமிழகத்தில் இருந்து தலைமன்னாருக்கு பாலம்: டெல்லி சென்ற ரணில், ஆய்வு நடத்தும் இந்தியா

OruvanOruvan

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் பாலம் அமைப்பதற்கான முன்மொழிவை இந்திய அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரு நாடுகளுக்கும் இடையில் பாலம் வரலாற்று கதைகளுடன் தொடர்புப்பட்ட ஒன்றாகும். இராமாயணத்தில் அனுமன் தனது படைகளை இலங்கைக்கு அழைத்து வர தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கு பாலம் அமைத்ததாக வரலாற்று கதைகள் உண்டு.

இந்நிலையில், 23 கிலோ மீற்றர் தூரம் கொண்ட இந்த பாலத்தை அமைப்பதற்காக சாத்தியகூறுகள் தொடர்பில் இந்திய அரசாங்கம் பரிசீலித்து வருகின்றது.

கடந்த வருடம் ஜூலை மாதம் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் டெல்லி விஜயத்தின் போது முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை மற்றும் கொழும்பு ஆகிய மூலோபாய துறைமுகங்களுக்கு நில அணுகலை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.

இதைத் தொடர்ந்து, இந்திய வெளியுறவு அமைச்சகம் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் அரசு நிறுவனங்களை உள்ளடக்கிய ஒரு கூட்டத்தைக் கூட்டியது.

உத்தேச கடல் பாலத்திற்கான விரிவான திட்டத்தை உருவாக்கும் முன், விரிவான சாத்தியக்கூறு ஆய்வை நடத்துவதற்கான திட்டத்தை வெளியுறவு அமைச்சத்திற்கு அதிகாரிகள் வெளிப்படுத்தியுள்ளனர்.

பால், எண்ணெய், மின்சாரம் மற்றும் கப்பல் போக்குவரத்து உட்பட பல்வேறு துறைகளில் பரவியுள்ள எண்ணற்ற பிரச்சினைகள் குறித்து கூட்டத்தில் பேசப்பட்டது, இவை அனைத்தும் ரணில் விக்கிரமசிங்கவின் விஜயத்தின் போது விவாதிக்கப்பட்ட தலைப்புகளாக இருந்தன.

விரிந்த கடல் பாலத்தின் கட்டுமானத்திற்கு கணிசமான நிதி தேவைப்படும், மேலும் இது இருதரப்பு வர்த்தகத்திற்கு ஒரு வரமாக இருக்கும் என இந்த கலந்துரையாடலின் போது சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இந்த கடல் பாலத்தின் தேவை பற்றிய விவாதங்கள் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நீடித்து வருகின்றன.

2015 டிசம்பரில், மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி, ஜனாதிபதி விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடியதைத் தொடர்ந்து சாலை மற்றும் ரயில் பாலம் அமைப்பதற்கான திட்டத்தை வெளிப்படுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.