போக்குவரத்து குற்றங்கள் தொடர்பில் விசேட கவனம்: தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் எதிர்ப்பு

OruvanOruvan

CCTV monitoring for Colombo traffic offenders

போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளை பாதுகாப்பு (CCTV) கெமராக்கள் மூலம் கண்டறியும் விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் ஆரம்பமாகும் இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை கொழும்பு நகரை மையமாகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்படுகிறது.

கொழும்பு நகரில் சுமார் 30 இடங்களில் 118 கெமராக்கள் மூலம் 24 மணிநேரமும் பொலிஸாரினால் கண்காணிப்பு நடவடிக்கை முன்னெடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த வேலைத்திட்டமானது போக்குவரத்து விதி மீறல்களை கண்டறிவதற்கு சிறந்த நடவடிக்கையாகும் எனவும், வீதி விபத்துகளை மற்றும் அதனால் ஏற்படும் மரணங்களை கட்டுப்படுத்துவதற்கு சிறந்த வழியாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

அபராதம் விதிக்கப்படும் முறை

இந்த திட்டத்தின் படி, கொழும்பு நகருக்குள் பிரவேசிக்கும் சாரதியொருவர் போக்குவரத்து விதிகளை மீறி கொழும்பை விட்டு வெளியேறும் நிலையிலும், பாதுகாப்பு கெமராக்கள் மூலம் பரிசோதிக்கப்பட்டு சாரதி வசிக்கும் பொலிஸ் அதிகார எல்லைக்குட்பட்ட பொலிஸ் நிலையத்தின் ஊடாக வீடுகளுக்கு அறிவிக்கப்படவுள்ளது.

தொடர்ந்து சாரதி போக்குவரத்து விதிகளை மீறியுள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டதன் பின்னரே அவருக்கான அபராத சீட்டு வழங்கப்படுமென பொலிஸாரினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உரிமையாளரின் வாகனத்தை வேறு தரப்பினர் பயன்படுத்தி போக்குவரத்து விதிகளை மீறும் நிலையில், உரிய அபராதம் வாகனத்தின் உரிமையாளர் அல்ல வாகனத்தை செலுத்தும் நபருக்கு விதிக்கப்படும் என குறிப்பிடப்படுகிறது.

வளர்ச்சியடைந்த நாடுகளில் இந்த நடைமுறை பொதுவானது

போக்குவரத்து விதிகளை மீறுவோர் குறித்த கண்காணிப்பு நடவடிக்கைகளில் வீதிகளில் பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்பு கெமராக்களையே (CCTV) பொலிஸார் பயன்படுத்தவுள்ளனர்.

பொதுவாக நாடளாவிய ரீதியில் நாளாந்தம் நடக்கும் அத்தனை போக்குவரத்து விதி மீறல்களும் போக்குவரத்து பொலிஸாரினால் கண்காணிக்கப்படுவதில்லை. சில விதி மீறல்கள் கவனிக்கப்படாமலேயே போயுள்ளன.

இவ்வாறான தவறுகளை தவிர்க்கும் வகையிலே வளர்ச்சியடைந்த நாடுகளில் பாதுகாப்பு கெமராக்களை பயன்படுத்தி போக்குவரத்து குற்றங்களை கண்டறியும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறது.

விதிமுறை மீறப்படுகின்ற போது வாகன உரிமையாளர்களின் வீடுகளுக்கே அபராத சீட்டு அனுப்பிவைக்கப்படும் நடைமுறை காணப்படுகிறது. இதன் காரணமாக இவ்வாறான நாடுகளில் போக்குவரத்து குற்றங்கள் குறைவாக காணப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இலஞ்ச ஊழல் இல்லாதொழிக்கப்படும்

போக்குவரத்து விதி மீறல்களின் போது இலஞ்சம் பெறும் நிலைமை காணப்படுவதாக பரவலாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகிறது.

பேராபத்தை ஏற்படுத்தும் வகையிலான போக்குவரத்து குற்றங்களின் போதும் இலஞ்சம் வழங்கி சட்ட நடவடிக்கையில் இருந்து தப்பித்த நடவடிக்கைகளை கடந்த கால நடைமுறைகளில் ஊடாக காணமுடிகிறது.

இந்த நிலையில், இலஞ்ச ஊழல் மட்டுப்படுத்தப்படும் என்பதே இந்த கண்காணிப்பு நடவடிக்கையின் நேர்மறை அம்சமாக பார்க்கப்படுகிறது.

இருப்பினும், தொழில்நுட்ப துஷ்பிரயோகம் குறித்தும் அவதானமாக இருக்க வேண்டுமென வலியுறுத்தப்படுகிறது.

விபத்துகள் குறைவடையும் சாத்தியம்

இலங்கையை பொறுத்தவரையில் வருடாந்தம் சுமார் 12,000 வீதி விபத்துகள் இடம்பெறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாடளாவிய ரீதியில் பெருமளவான குடும்பங்கள் பொருளாதார ரீதியில் பாதிப்பை எதிர்கொண்டுள்ள.

நாடளாவிய ரீதியில் இடம்பெறும் வீதி விபத்துகளை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வீதி விபத்துகளினால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை மிஞ்சிவிடும் என்பதில் இருவேறு கருத்தில்லை.

இந்த பின்னணியில் விதிமுறைகளை மீறி வாகனம் செலுத்துவோர் கண்டறியப்படும் நிலையில், விபத்துகளும் கணிசமான அளவு குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், முறையான பயிற்சியின்றி அரைகுறை வாகன ஓட்டிகளை இந்த கண்காணிப்பு நடவடிக்கையின் மூலம் கட்டுப்படுத்த முடியும்.

சிவப்புக் கொடி காட்டும் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்

பாதுகாப்பு கெமராக்கள் மூலம் போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு அபராத சீட்டுகளை வீடுகளுக்கு அனுப்பும் முறைமைக்கு இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்த திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்கு பேருந்துகளை ஒழுங்குபடுத்துவதுடன், பேருந்து முன்னுரிமை பாதை சட்டத்தினை அமுல்படுத்த வேண்டுமென இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

பேருந்து பாதையில் முச்சக்கர வண்டிகள் உட்பட ஏனைய வாகனங்களும் பயணிப்பதால் பேருந்துகளை செலுத்துவதில் சிக்கல் ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.