SHORT STORY: உள்நாட்டு விபரங்கள் ஒரே பார்வையில்..
பதில் பாதுகாப்பு செயலாளர் நியமனம்
பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் திஸாநாயக்க, பதில் பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாதுகாப்பு செயலாளர் (ஓய்வு) ஜெனரல் கமல் குணரத்ன நாடு திரும்பும் வரை இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
மேலதிக செயலாளர் (சிவில் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தி) என்ற அவரது கணிசமான பதவியின் கடமைகளுக்கு மேலதிகமாக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
உயர் தரத்தை நிறைவு செய்த மாணவர்களுக்கு அறிமுகமாகும் தொழிற்கல்வி
உயர் தரத்தை நிறைவு செய்யும் மாணவர்களுக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் பாடசாலையிலேயே தொழிற்கல்வி வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இத்திட்டம் நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 299 பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் உயர் தரப் பரீட்சைக்காக தோற்றியுள்ள மாணவர்கள் பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதி முன்னர் இந்தத் திட்டத்தில் பதிவு செய்யலாம்.
இது தொடர்பான மேலதிக தகவல்களை பிரதேச செயலகத்தின் திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடம் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை வருகிறார் தாய்லாந்து பிரதமர்
இருதரப்பு வர்த்தகத்தை 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்க எதிர்பார்க்கும் இலங்கை, தாய்லாந்துடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் (FTA) பெப்ரவரி 3ஆம் திகதி கைச்சாத்திடவுள்ளது.
தாய்லாந்தின் பிரதமர் ஸ்ரேத்தா தவிசின், சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக பெப்ரவரி 3 ஆம் திகதி இலங்கை விஜயம் செய்கிறார்.
சிரேஷ்ட புற்றுநோயியல் நிபுணருக்கு பிணை
கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் சிரேஷ்ட புற்றுநோயியல் நிபுணருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலையின் பெண் கனிஷ்ட ஊழியர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந் நிலையில் 61 வயதான கிரிஷாந்த பெரேரா என்ற சிரேஷ்ட புற்றுநோயியல் நிபுணரை காலி நீதிவான் தலா ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான பிணையில் விடுத்தார்.
அநுர ஜனாதிபதியானால் பெண்ணொருவர் பிரதமர்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் பெண் ஒருவர் பிரதமர் பதவியை வகிபார் என அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
பெண் தலைவர் என்பது இந்நாட்டு பெண்களின் எதிர்பார்ப்பு. அதனால் அந்த பணியை எமது அரசாங்கம் செய்யும் எனவும் அவர் கூறினார். தேசிய மக்கள் சக்தியில் உள்ள பிரபல்யமான பெண் உறுப்பினராக ஹரின அமரசூரிய உள்ளார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.
CEB உழியர்கள் பணி நீக்கம்; தீர்க்கமான தீர்மானத்தை இன்று எடுக்கவுள்ள தொழிற்சங்கங்கள்
இலங்கை மின்சார சபை ஊழியர்களின் (CEB) அண்மைய பணி இடைநிறுத்தத்திற்கு எதிரான தீர்மானம் ஒன்று இன்று (22) எடுக்கப்படவுள்ளது.
CEB இன் தொழிற்சங்கங்களின் தலைமையில் இன்று நடைபெறவுள்ள கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.
இந்த கூட்டத்தில் நாடு முழுவதிலுமிருந்து கிட்டத்தட்ட 100 தொழிற்சங்கங்கள் பங்கேற்கவுள்ளன.
CEB மறுசீரமைப்பு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 15 ஊழியர்கள் அண்மையில் பணி நீக்கம் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
க.பொ.த. சாதாரண பரீட்சை விண்ணப்பம் கோரல்
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான (2023/2024) விண்ணப்பம் கோரல் தொடர்பான அறிவிப்பினை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை ஜனவரி 23 தொடக்கம் பெப்ரவரி 15 வரை ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம்.
முழு அறிவிப்பு கீழே:
குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுடன் தொடர்புடைய இராணுவ சிப்பாய் கைது
திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுடன் தொடர்பை பேணிய இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கஹதுடுவ - உஸ்வத்த பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடமிருந்து போதைப்பொருட்கள், இராணுவ சீருடைகள் மற்றும் அவருடைய பதவிக்குரித்தான சில லட்சினைகளை காவல்துறை விடேச அதிரடிப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.
உயிருக்கு எமனான விக்கல்
யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியை சேர்ந்த 41 வயதான மயில்வாகனம் ஐங்கரன் என்பவர் மயங்கி விழுந்ததில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தநபர் நேற்றைய தினம் மதிய உணவு அருந்திக்கொண்டிருந்த வேளையில் திடீரென விக்கல் ஏற்பட்டது.
இதனையடுத்து குறித்த நபரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
மின் கட்டண குறைப்பு; PUCSL இன்று இறுதி தீர்மானம்
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) இன்று கூடவுள்ளது.
இதன்போது இலங்கை மின்சார (CEB) சபையினால் முன்மொழியப்பட்ட மின் கட்டண திருத்தம் தொடர்பில் PUCSL இறுதித் தீர்மானம் மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொருத்தமான முடிவை எட்டியதும், CEB முன்மொழிவு மற்றும் PUCSL இன் முடிவு மூன்று வார காலத்திற்கு பகிரங்கப்படுத்தப்படும்.
அதற்கு அமைவாக மின் கட்டணத்தில் குறைப்பு மேற்கொள்ளப்படும் என்றும் எதிர்பார்க்கப்டுகிறது.