இலங்கையில் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் IIT Madras: கண்டியில் புதிய கிளையை திறக்க ஏற்பாடு

OruvanOruvan

இந்தியாவின் முதன்மையான பொறியியல் கல்லூரிகளில் ஒன்றான இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT Madras) இந்த ஆண்டு இலங்கையின் கண்டியில் தமது கிளை வளாகத்தைத் திறக்க உள்ளது.

வெளிநாடுகளில் IIT யின் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக இந்த செயல்பாடு இருக்கும். புதிய வளாகத்திற்கான முன்மொழிவு கடந்த நவம்பர் மாதம் இடம்பெற்றதுடன், இதற்கான நிதி ஒதுக்கீடுகளும் இடம்பெற்றுள்ளன.

ஐஐடி தமது கல்வியாளர்கள் குழுவை விரைவில் இலங்கைக்கு அனுப்ப உள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. வளாகத்தை அமைப்பது தொடர்பான கலந்துரையாடலுக்காக அடுத்த மாதம் ஐஐடி இலங்கை வரவுள்ளது. இதற்கு முன்னர் இலங்கைப் பிரதிநிதிகள் இந்தியாவுக்கு செல்ல உள்ளனர்.

இலங்கை விஜயத்தில் ஐஐடி குழுபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு (யுஜிசி) அதன் பாடநெறிகள் குறித்து விளக்கமளிக்கும். அதன் பின்னர் கண்டி கிளை வளாகத்தை நிறுவுவதற்கான செயல்முறையைத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கம் இந்திய பல்கலைக்கழக கிளைகளை இலங்கையில் நிறுவுவதற்கான கோரிக்கைகளை விடுத்துள்ளது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர், இந்திய பல்கலைக்கழக கிளைகளை இலங்கையில் அமைக்க நடவடிக்கைகளை எடுக்கும் என அண்மையில் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்திய தொழில்நுட்பக் கழகம் தென்னிந்தியாவில் சென்னையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியாகும். இந்திய பாராளுமன்றத்தின் ஆணையால் நிறுவப்பட்ட ஒரு கல்வி நிறுவனமும் ஆகும்.