மனித - யானை மோதல்: அதிகரிக்கும் உயிர்ச்சேதம்

OruvanOruvan

Human-elephant conflict

மனித மற்றும் யானை மோதல் காரணமாக ஏற்படும் உயிரிச்சேதம் ஆண்டுதோறும் அதிகரித்து வருவதாக தெரியவந்துள்ளது.

இதன்படி, 2022 ஆம் ஆண்டில் மனித மற்றும் யானை மோதல் காரணமாக 435 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 2023 ஆம் ஆண்டில் குறித்த எண்ணிக்கை 470 ஆக அதிகரித்துள்ளது.

இந்தக் காலப்பகுதியில் உயிரிழந்த மற்றும் சொத்துக்களை இழந்தவர்களுக்கு 376 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்கப்பட்டுள்ள வனஜீவராசிகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், குறித்த காலப்பகுதியில் உயிரிழந்த யானைகளின் எண்ணிக்கை 191 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி 83 யானைகளும், மின்சாரம் தாக்கி 66 யானைகளும், வெட்டப்பட்ட நிலையில் 47 யானைகளும், விஷம் உற்கொண்டு 23 யானைகளும் உயிரிழந்துள்ளன.

அத்துடன், வீதி விபத்துகள் மற்றும் நீரில் மூழ்கி 02 யானைகளும், தவறி விழுந்து 05 யானைகளும் உயிரிழந்துள்ளன. கிணறுகள் மற்றும் பிற விபத்துகள் காரணமாக 15 யானைகள் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

2011 ஆம் ஆண்டு இலங்கையில் நடத்தப்பட்ட முதலாவது தேசிய யானை கணக்கெடுப்பின்படி, காட்டு யானைகளின் எண்ணிக்கை 5,879 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் 2012 முதல் 2022 வரையான காலப்பகுதியில் குறைந்தபட்சம் 3,291 யானைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த உயிரிழப்புகளில் எழுபது வீதமானவை மனித நடத்தைகள் காரணமாக இடம்பெற்றவை என தெரிவிக்கப்படுகிறது. மக்களின் செயல்பாடுகள் காரணமாக 2022 ஆம் ஆண்டில் மாத்திரம் 439 யானைகள் உயிரிழந்துள்ளன.

இதனிடையே, அநுராதபுரம் வனவிலங்கு வலயங்கள் மற்றும் கிழக்கு வனவிலங்கு வலயங்கள் ஆகியவற்றுக்கு அருகாமையில் பெரும்பாலான மனித மற்றும் யானை மோதல்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

சட்டவிரோதமாக காடுகள் அழிக்கப்படுவதன் காரணமாக யானைகள் கிராமங்களுக்குள் பிரவேசிக்கும் நிலை அதிகரித்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

இலங்கையின் 62 வீத நிலப்பரப்பில் யானைகள் காணப்படுகின்ற போதிலும் 18 வீதம் மாத்திரமே உத்தியோகப்பூர்வமாக காணப்படுகின்றன. எஞ்சிய 44 வீதமான வனப்பகுதியை மனிதர்களும் யானைகளும் பகிந்துகொள்வதாக அமைகின்றது.

ஆகவே, ஒட்டுமொத்த யானைகளையும் வெறும் 18 வீத நிலப்பரப்பில் அடக்கிவிட முடியாது. இந்த நிலையிலே, யானை மற்றும் மனித மோதல் அதிகரித்து வருகின்றது.

இந்த பின்னணியில் மனித மற்றும் யானை மோதலைத் கட்டுப்படுத்துவதற்கான தேசிய செயல்திட்டமொன்று கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மதம் தயாரிக்கப்பட்டு அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக குறித்த திட்டம் இதுவரை நடைமுறைப்படுத்தப்படாமலே இருக்கின்றது.