தாய்வானில் கலை கட்டிய பொங்கல் விழா: ஆட்டம் பாட்டம் என அமர்களப்படுத்திய தமிழர்கள்

OruvanOruvan

Pongal Festival

தாய்வான் நாட்டில் 12ஆம் ஆண்டு பொங்கல் திருவிழா கொண்டாட்டம் கோலாகலமாக நடைபெற்றது.

நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று ஆட்டம் பாட்டம் என அமர்களப்படுத்தினர்.

தாய்வான் தமிழ்ச்சங்கத்தின் 12 ஆம் ஆண்டு பொங்கல் விழா தாய்வான் நாட்டின் தலைநகரான தைபேயில் உள்ள தைவான் தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் உள்ளரங்கத்தில் சனிக்கிழமை விமரிசையாக கொண்டாடப்பட்டது.

இந்த பொங்கல் விழாவில் சுமார் 250 பேர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.

தாய்வான் தமிழ்ச்சங்கத்தின் கலைநிகழ்ச்சிகள் எப்பொழுதும் நம்முடைய பாரம்பரியத்தை நினைவூட்டுவதாக இருக்கும். அந்த வகையில் இத்தைப்பொங்கல் விழாவில் குச்சிப்புடி, பரதநாட்டியம், ஒடிசி, குழந்தைகளின் நடனம், கலைஞர்களின் ஆடல் பாடல் என்று பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

சிறுவர் சிறுமியரின் ஆடை அணிவகுப்பு பார்ப்பவர் அனைவரையும் பரவசப்படுத்தியது.

இந்த நிகழ்ச்சியில் தைவான் நாட்டினர் மட்டுமல்லாமல் பல நாட்டு மக்களும் கலந்துகொண்டு நிகழ்ச்சியை கண்டுகளித்ததோடல்லாமல் அவர்களும் தங்கள் பங்களிப்பாக கலைநிகழ்ச்சி நடத்தி கொடுத்தார்கள்.

இந்த வகையில் தாய்வான் தமிழ்ச்சங்கமானது இந்திய மற்றும் தைவான் மக்களிடையே இணைப்பு பாலமாக செயல்படுகிறது என்று சொல்வது மிகையாகாது.

தாய்வான் தமிழ்ச்சங்க துணைப் பொது செயலாளர் சு.பொன் முகுந்தன் மற்றும் பொருளாள‌ர் தங்கராசு அரிச்சந்திரன் விழாவை ஒருங்கிணைத்தார். நிறைவாக தமிழ்ச்சங்கத்தின் பொருளாளர் ராஜமோகன் அனைவருக்கும் நன்றி கூற, நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.