புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கின்றோம்: போராட்டத்திற்கு அழைப்பு விடுப்பு

OruvanOruvan

புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாய் கடை அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுப்பதாக துக்குடியிருப்பு வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.

முல்லைத்தீவு ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்தின் தலைவர் தர்மலிங்கம் த.நவநீதன் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“புதுக்குடியிருப்பு சந்தை பகுதியிலுள்ள சில வர்த்தக நிலையங்கள் தகர கொட்டகையிலேயே இயங்கிவருகின்றன. இவ்வாறான நிலையில் தகர கொட்டகையை அகற்றிவிட்டு கட்டடம் கட்டி தருவதாக அண்மையில் பிரசேத சபை தெரிவித்திருந்தது.

இந்நிலையில் ஒன்றரை வருடங்களுக்கு பின்னர் எவ்வித முன்னறிவிப்புமின்றி குறித்த வியாபாரிகளிடம் இருபது வருடங்களுக்கான கட்டணமாக மாதம் ஏழாயிரம் ரூபா அடிப்படையில் பணத்தை தரும் பட்சத்தில் குறித்த பகுதியில் வியாபாரத்தை நடாத்த அனுமதி தருவதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து இவ்விடயம் தொடர்பில் மீள் பரிசீலணையை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் அறிவித்திருந்தோம். இருப்பினும் எவ்வித முன் அறிவிப்புமின்றி எதிர்வரும் 19 ஆம் திகதி குறித்த வியாபார நிலையங்களை ஏலம் விட தீர்மானித்திருப்பதாக ஊடகங்கள் ஊடாக அறிந்தோம்.

எனவே புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் அசமந்துபோக்குடனான நடவடிக்கையை கண்டிக்கும் விதமாய் புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு எதிரான போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கின்றோம்.

எமது இந்த நியாயமான கோரிக்கைக்கு பிரதேச மக்கள், வர்த்தகர்கள், அரச ,அரச சார்பற்ற உத்தியோகத்தர்கள் என அனைவரும் ஒத்துழைப்பை வழங்கவேண்டும்.”என தெரிவித்தார்.