சுற்றுநிறுபத்தை மீறிய 51 பாடசாலை ஆசிரியர்கள் இடமாற்றம்: கல்வி அமைச்சு நடவடிக்கை

OruvanOruvan

51 பாடசாலை ஆசிரியர்களை அவர்கள் பணியாற்றிய பாடசாலைகளில் இருந்து வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்வதற்கு மத்திய மாகாண கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த பாடசாலைகளில் படிக்கும் மாணவர்களிடம் பணம் வசூலித்து, பயிற்சி வகுப்புகளை நடத்தக் கூடாது என சுற்றுநிறுபம் மூலம் அறிவிக்கப்பட்ட போதிலும் அதை ஆசிரியர்கள் புறக்கணித்துள்ளனர்.

இந்த சுற்றுநிறுபத்தை மீறி சில ஆசிரியர்கள் மேலதிக வகுப்புகளை நடாத்துவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் உரிய இடங்களில் சோதனை நடத்துவதற்கு மத்திய மாகாண கல்வி செயலாளர் மேனகா ஹேரத்தின் பணிப்புரையின் பேரில் விசேட சுற்றிவளைப்பு ஒன்றும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

சுற்றிவளைப்பிற்காக விசேட குழுவொன்று உரிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு முறையான விசாரணை நடத்தப்பட்டது.

பின் சுற்றுநிறுபத்தை மீறிய ஆசிரியர்கள் வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் தமது உரிமைகள், கடமைகள் மற்றும் பொறுப்புக்களில் கவனம் செலுத்த வேண்டும் என மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யூ. கமகே மேலும் தெரிவித்தார்.