முச்சக்கர வண்டி சாரதிகள் விவகாரம்: அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் விசேட குழு நியமனம்

OruvanOruvan

Three-wheel drivers : New initiative from Labour Ministry

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் அனைத்து முச்சக்கர வண்டி சாரதி சங்கங்களையும் உள்ளடக்கிய இடைக்கால வழி நடத்தல் குழுவொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

அமைச்சரின் கூற்றுப்படி, இந்தக் குழுவானது நேற்று (ஜனவரி 16) நிறுவப்பட்டது.

தொழில் திணைக்களத்தின் கேட்போர்கூடத்தில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவின் தலைமையில் நடைபெற்ற துறைசார் குழுக்களை நிறுவுவது தொடர்பான கலந்துரையாடலின் போதே இந்தக் குழு ஸ்தாபிக்கப்பட்டது.

முச்சக்கரவண்டிச் சாரதிகளுக்கான நிபுணத்துவ சபை ஸ்தாபிக்கப்படும் வரை இந்த இடைக்கால வழிநடத்தல் குழு முச்சக்கரவண்டிச் சாரதிகளின் தொழில்சார் மற்றும் சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்.

நாடு முழுவதிலும் செயற்பட்டுவரும் அனைத்து முச்சக்கரவண்டிச் சாரதிகளின் சங்கங்களின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய இந்த இடைக்காலக் குழுவில், அவர்களின் தொழில் கௌரவத்தையும், வளர்ச்சியையும் மேம்படுத்துவது தொடர்பாக இதற்கு முன்னர் இடம்பெற்ற கலந்துரையாடலில் இணக்கம் காணப்பட்ட விடயங்கள் அடங்கிய பிரேரணை அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது.

இந்த யோசனைகளை நடைமுறைப்படுத்துவதற்கான முன்மொழிவுகளை சட்டமாக்கி வர்த்தமானியில் வெளியிட நடவடிக்கை மேற்கொண்டு முச்சக்கரவண்டிச் சாரதிகளாக பணிபுரியும் அனைவரையும் தரவு கட்டமைப்பில் பதிவு செய்து மிகக் குறுகிய காலத்திற்குள் புதிய QR குறியீட்டு முறையை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தனியார் துறை காப்புறுதி நிறுவனங்களோ அல்லது வேறு எந்தவொரு தரப்பினரும் சமூகப் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட மாட்டார்கள்.

அவ்வாறே நாட்டில் தற்போதுள்ள சமூக பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் புதிய சமூக பாதுகாப்பு முறைமைகள் என்பன அரசின் கண்காணிப்பில் நடைமுறைப்படுத்தப்படும் என இக்கூட்டத்தில் அமைச்சர் சுட்டிக்காட்டினார்