ஜெனீவா அமர்வை எதிர்கொள்ளும் இலங்கை: ஆபிரிக்கா நாடுகளும் ஒத்துழைப்பு

OruvanOruvan

Sri Lanka to face the Geneva session

ஆபிரிக்க நாடுகளின் ஒத்துழைப்புடன் ஜெனீவா மனித உரிமைகள் அமர்வில் புதிய அணுகுமுறைகளைக் கையாள இலங்கை அரசாங்கம் உத்தேசித்துள்ளது.

இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐநா மனித உரிமைகள் பேரவையின் அமர்வின் போது, இலங்கை அரசாங்கத்தின் சார்பில் உத்தேச புதிய அணுகுமுறைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிய வந்துள்ளது.

தற்போது சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகருக்கு சென்றுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அதன் பின்னர் அணிசேரா நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக உகாண்டா செல்லவுள்ளார். கடந்த திங்கட்கிழமை ஆரம்பமான அணிசேரா நாடுகளின் 19வது உச்சி மாநாட்டிற்காக உலகம் முழுவதும் உள்ள சுமார் 120 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் உகாண்டா தலைநகர் கம்பாலாவிற்கு வருகை தந்துள்ளனர்.

இந்நிலையில் உச்சிமாநாட்டின் ஒருபுறம், UNHRC இல் ஒத்துழைப்பு உட்பட இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்காக பல ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்களுடன் ஜனாதிபதி இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை தொடர்பான தீர்மானத்தை முன்வைத்த முக்கிய உறுப்பு நாடுகளுக்கு தலைமை தாங்கும் நாடான ஐக்கிய இராச்சியத்துடன் அரசாங்கம் புதிய தொடர்புகளை மேற்கொள்ளும் முயற்சிகளையும் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக என தகவலறிந்த வட்டாரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

அதன் ஒரு கட்டமாகவே யேமனில் இருந்து வரும் ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களை எதிர்கொள்வதற்காக செங்கடலில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து தலைமையிலான நடவடிக்கைகளில் சேர ஜனாதிபதி சமீபத்தில் முடிவு செய்துள்ளதாக ராஜதந்திர வட்டாரங்களில் இருந்து தெரிய வந்துள்ளது.

உள்நாட்டுப் போர் முடிவடைந்த பின்னர் 2012 ஆம் ஆண்டு முதல் ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கம் பல்வேறு பாதகமான தீர்மானங்களை எதிர்கொண்டுள்ளது.. எதிர்வரும் அமர்வில் இலங்கைக்கு- எதிரான தீர்மானங்கள் குறித்து மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இலங்கை தொடர்பில் அண்மைக்காலங்களில் எடுக்கப்பட்ட தீர்மானம் 46/1 மற்றும் 51/1 ஐ இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக நிராகரித்திருந்தது, அதன் காரணமாக உள்விவகாரங்களில் தலையிடுவதாக விமர்சிக்கப்படும் “பொறுப்புக் கூறல்” என்ற தீர்மானம் மேற்கொள்ளப்படுவதற்கு வழிவகுத்தது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் சமீபத்திய தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழ் சமூகத்துடனான மோதலுக்குப் பின்னரான நல்லிணக்கத்தை நோக்கிய ஒரு முக்கிய படியாக, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் ஒன்றை நிறுவுவதற்கான சட்டமூலத்தை அரசாங்கம் அண்மையில் நிறைவேற்றியது.

‘தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம்’ அமைப்பதற்கான சட்டமூலம் 48 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது எனினும், 7 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு எதிராக வாக்களித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.