நாட்டின் நிலைமையை பொருத்தே நிவாரணம் வழங்கப்படும்: அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

OruvanOruvan

Douglas Devananda M.P

நாட்டின் நிலையை உணர்ந்து ஓரிரு தடவைக்கு பின்பும் நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்க்க கூடாது எனவும் விவசாயத்திலும் மீனவர்கள் ஈடுபட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.

நன்னீர் மீனவர்களின் தேவைகள் தொடர்பில் அறிந்து கொள்ளும் கலந்துரையாடல் கிளிநொச்சியில் இடம்பெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

நாடு பொருளாதார ரீதியில் பாரிய பாதிப்புள்ளாகியுள்ளது. எவ்வாறாயினும் குறிப்பிடத்தக்க தடவைகளிற்கு மானியமாக அல்லது அரைமானியமாக மீனவர்களுக்கு தருவதற்கு யோசித்து வருகிறோம். புதுமுறிப்பில் உள்ள 10 தொட்டிகளில் 5 தொட்டிகளில் மீன் குஞ்சுகளை வளர்ந்துள்ளோம். மற்ற 5 தொட்டிகளிலும் வளர்க்க உள்ளோம்.

இன்று குறித்த தொட்டிகளிலிருந்து பெறப்பட்ட ஒரு இலட்சத்து 30 ஆயிரம் மீன் குஞ்சுகளை ஊற்றுபுலம் குளத்தில் விட்டுள்ளோம். உங்கள் நம்பிக்கைகள் வீண் போகாத வகையில் உங்களது வாழ்வாதாரங்களை பாதுகாத்து, அதனை வளர்த்தெடுக்கும் வகையில் எமது நடவடிக்கைகள் இருக்கும்.

ஓரிரு தடவைக்கு பின்பு நிவாரணம் கிடைக்கும் என எதிர்பார்க்க கூடாது. ஆரம்பிப்பதற்காக நாங்கள் ஏதோவொரு வகையில் செய்து தருவோம்.

6 மாதம் குளத்தில் மீன்பிடியில் ஈடுபடும் நீங்கள் மற்ற 6 மாதம் விவசாயத்திலும் ஈடுபடுவதன் மூலமே உங்கள் வாழ்வாதாரம் உயரும் என நம்புகிறேன்.

உங்களுக்கு மீன்குஞ்சுகள் மற்றும் இரால் குஞ்சுகளை ஓரிரு கட்டங்களில் எவ்வாறு தருகின்றோமோ, அதே போல் வீட்டுத் தோட்டத்திற்கான உதவிகளையும் முதல் கட்டமாக தருவதற்கு தயாராக இருக்கிறோம்.

விவசாயம் செய்வதற்கான காணிகள் உள்ளிட்ட தேவைகள் இருந்தால் அந்த சங்கங்கள் ஊடாக எமக்கு விண்ணப்பியுங்கள்.

பொழுதுபோக்குக்கா கதைக்கும் அரசியலை நான் செய்வதில்லை. கடந்தகால அரசியல் இருந்தவற்றை அழித்துக் கொண்டு போனதேயன்றி, இருக்கிறதை பாதுகாத்து முன்னோக்கி போவதாக இருக்கவில்லை. இருப்பதை பாதுகாத்து முன்னோக்கி போவதே என்னுடைய அரசியல் எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.