தரமற்ற மருந்து இறக்குமதி: சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் உள்ளிட்டோருக்கான விளக்கமறியல் நீடிப்பு

OruvanOruvan

former Secretary to the Ministry of Health, Janaka Chandragupta

தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் மருந்துக் கொள்வனவு தொடர்பில் சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்தா உள்ளிட்ட ஏழு சந்தேக நபர்களுக்கான விளக்கமறியல் இன்று (17) மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட 07 சந்தேக நபர்களையும் ஜனவரி 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.

சந்திரகுப்தா, டிசம்பர் 18 ஆம் திகதி, மனித இம்யூனோகுளோபுலின் குப்பிகள் கொள்வனவு முறைகேடு தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரான போது கைது செய்யப்பட்டார்.

டிசம்பர் 14 அன்று, மாளிகாகந்த நீதவான் லோச்சனி அபேவிக்ரம, ‘தரமற்ற’ மனித நரம்பு வழி இம்யூனோகுளோபுலின் (IVIG) மருந்துகளை கொள்வனவு செய்தமை தொடர்பில் சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளரின் நடவடிக்கைகள் சந்தேகத்திற்குரியதாகக் கருதப்படுவதாக அறிவித்திருந்தார்.

அதேநேரம், தரமற்ற மருந்து கொள்வனவு செய்து விநியோகித்தமை தொடர்பில் பொறுப்புவாய்ந்த சகல தரப்பினரையும் கைது செய்து, பாகுபாடின்றி நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறும் நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக இதுவரை சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர், சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவின் பணிப்பாளர் மற்றும் அதே பிரிவைச் சேர்ந்த மேலும் மூன்று அதிகாரிகள் , போலி ஆவணங்கள் மூலம் தரமற்ற இம்யூனோகுளோபுலின் குப்பிகளை இறக்குமதி செய்ததாகக் கூறப்படும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் உரிமையாளர் உட்பட பல முக்கிய நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.