செங்கடலில் கப்பல்கள் பயணிப்பதில் ஏற்படுள்ள நெருக்கடி: எதிர்காலத்தில் விலைகள் இரட்டிப்பாகும் சாத்தியம்
இலங்கையின் ஏற்றுமதியாளர்கள் மேற்கு நோக்கிய சரக்கு ஏற்றுமதிகளுக்கான கட்டணங்களில் செங்குத்தான அதிகரிப்பைக் காண்பதாக தெரிவிக்கின்றனர்.
செங்கடலில் ஹூதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் கப்பல்கள் ஆபிரிக்காவைச் சுற்றி செல்கின்றன. இதனால் பாரிய தாமதங்கள் ஏற்படுகின்றன.
ஆப்பிரிக்காவை சுற்றிச் செல்வதால் ஒருபுறம் செலவுகள் அதிகமாகுவதுடன், நேர விரயமும் அதிகமாகியுள்ளதாக இலங்கை ஏற்றுமதியாளர்கள் கூறுகின்றனர்.
”ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் தென் மற்றும் வட அமெரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான கப்பல் நேரம் சுமார் 12 முதல் 14 நாட்கள் வரை அதிகரித்துள்ளது” என இலங்கையின் கூட்டு ஆடைகள் சங்க மன்றத்தின் பணிப்பாளர் நாயகம் யோஹான் லாரன்ஸ் தெரிவித்தார்.
”சில ஐரோப்பிய துறைமுகங்க கப்பல்கள் 20-அடி கொள்கலனுக்கு 2000 முதல் 3,000 அமெரிக்க டொலர்கள் அதிகமாக அறவிட ஆரம்பித்துள்ளன. இது சரக்கு செலவுகளை இரட்டிப்பாக்குகிறது. என்றாலும், கிழக்கு ஆசியாவுக்கான கப்பல் பயணங்களுக்கு இதுவரை விலைகள் உயரவில்லை.
ஷாங்காயில் இருந்து, 40 அடி கொண்ட கொள்கலன் சுமார் 1500 முதல் 1,600 அமெரிக்க டொலர்கள் அறவிடப்பட்ட நிலையில், தற்போது 900 முதல் 1,000 டொலர்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. கொள்கலன்கள் கிடைப்பதிலும் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள நேரிட்டுள்ளதாக ரிலையன்ஸ் அக்ரோ பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் விராஜ் பெரேரா கூறுகிறார்.
ஆப்பிரிக்காவைச் சுற்றிப் பயணம் செய்வது, மற்றும் திரும்பி வருவதற்கு மூன்று வாரங்கள் மேலதி நேரத்தை செலவழிக்க நேரிடுவதாக கொழும்பை தளமாகக் கொண்ட ஷிப்பர்ஸ் அகடமியின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரொஹான் மசகோரலா தெரிவித்தார்.
செங்கடலில் இந்த நிலைமை மேலும் பல மாதங்களுக்கு தொடருமாக இருந்தால் இலங்கை உட்பட பல ஆசிய நாடுகளில் பொருட்களின் விலைகளில் அதிகரிப்புகள் ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.