யானைகள் இறப்பை தடுக்க புதிய முயற்சி: விசேட இலக்கத்தை அறிமுகப்படுத்திய இலங்கை மின்சார சபை
சட்டவிரோத மின் கம்பி வேலிகள் அமைப்பு தொடர்பில் பொது மக்கள் முறையிடுவதற்காக இலங்கை மின்சார சபை (CEB) விசேட இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
சட்டவிரோத மின் வேலிகளினால் யானைகள் பலியாவதை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சட்டத்துக்கு புறம்பாக மின் வேலிகளை அமைப்பது தொடர்பில் பொது மக்கள் 1987 என்ற துரித இலக்கத்துக்கு அழைப்பினை மேற்கொண்டு முறையிட முடியும்.
2023 ஆம் ஆண்டில் இலங்கையில் 474 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளது. அதில் குறைந்தது 50 யானைகள் சட்டவிரோத மின் வேலிகளில் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் பொறியியலாளர் நோயல் பிரியந்த ஒரு அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
சட்டவிரோத மின்சார கம்பி வேலிகள் அமைப்பினை தடுக்க இலங்கை மின்சார சபை ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், காட்டு யானைகளின் இறப்பை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு பொது மக்களின் உதவியை நாடியுள்ளதாகவும் அவர் கூறினார்.