ரணிலுடன் டுபாயில் இணையும் இலங்கை அமைச்சர்கள் குழாம்: அங்கிருந்து உகண்டா நோக்கி பயணமாகத் திட்டம்

OruvanOruvan

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த 13ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகருக்கு சென்றதுடன், அங்கு உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்த மாநாட்டிலும் பங்கேற்றிருந்தார்.

சுவிட்சர்லாந்தின் ஆசிய வர்த்தக சம்மேளனத்துடன் இணைந்து இலங்கை முதலீட்டு சபை ஏற்பாடு செய்திருந்த வர்த்தக வட்டமேசை மாநாடு உட்பட பல்வேறு முதலீட்டாளர்களுடனும் ஜனாதிபதி சந்திப்புகளை நடத்தியிருந்தார்.

இந்நிலையில், சுவிட்சர்லாந்து பயணத்தை முடித்துக்கொண்டு ஜனாதிபதி இன்று உகண்டா நோக்கி பயணமாகி உள்ளார். அவர் டுபாய் வழியாக உகண்டா செல்கிறார்.

ஜனாதிபதியின் இந்த விஜயத்தில் பங்கேற்க உள்ள அமைச்சரவைக் குழாம், டுபாய் நோக்கி புறப்பட்டு சென்றுள்ளதுடன், டுபாயில் ஜனாதிபதியுடன் இணைந்து உகண்டா செல்ல உள்ளனர்.

உகாண்டா தலைநகர் கம்பாலாவில் நடைபெறவுள்ள அணிசேரா நாடுகளின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காகவே ஜனாதிபதி இந்த பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.