இளவரசி ஆனியிடம் மலையகத் தமிழர்களின் பிரச்சினைகளை எடுத்துரைக்க நடவடிக்கை: மனோ கணேசன் எம்.பி தெரிவிப்பு

OruvanOruvan

Mano ganeshan

இலங்கையில் மலையகத் தமிழர்கள் எதிர்கொள்ளும் அவலசிலை தொடர்பான விடயத்தை பிரித்தானியாவின் மன்னர் மூன்றாம் சார்லஸின் சகோதரியான இளவரசி ஆனியின் கவனத்துக்கு கொண்டுவர தமிழ் முற்போக்கு கூட்டணி நடவடிக்கையெடுத்துள்ளது.

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பேட்ரிக் ஊடாக இந்த விடயம் இளவரசி ஆனியிடம் தெரிவிக்க, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தற்போது இந்தியா சென்றுள்ள மனோ கணேசன், இளவரசி ஆனியின் வருகையை தாம் தவறவிடுவதாகவும், இதன் காரணமாக பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடம் இந்த விடத்தை தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் பாராளுமன்றத்தில் உள்ள ஒன்பது (09) மலையக தமிழ் எம்.பி.க்களின் கையொப்பங்களைப் பெற்றுக் கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அது பிரித்தானிய அரசாங்கத்திடம் கையளிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மலையகத் தமிழர்கள் ஓரங்கட்டப்பட்டதற்கு எந்தவொரு தேசத்தின் மீதும் பழி சுமத்த விரும்பவில்லை என்று வலியுறுத்தியுள்ள மனோ கணேசன் எம்.பி, எமது சமூகத்தின் அவல நிலை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.

இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 75 வருடங்களைக் குறிக்கும் வகையில் இளவரசி ஆனி இலங்கை வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.