கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனியார் பெண்கள் பாடசாலையில் கட்டிடம் வெடிப்பு: பாடசாலைக்கு வர வேண்டாம் என மாணவர்களுக்கு தகவல்

OruvanOruvan

St. Anthony's Girls' college

கட்டுகஸ்தோட்டை புனித அந்தோனியார் பெண்கள் பாடசாலையில் அமைந்துள்ள மூன்று மற்றும் இரண்டு மாடிக் கட்டிடங்களின் வகுப்பறைகள் பலவற்றில் திடீரென வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக அந்தக் கட்டிடங்கள் தற்காலிகமாக மூடப்பட்டு குறித்த கட்டடங்களில் காணப்பட்ட 6, 7, 8, 9, 10 மற்றும் 11ஆம் ஆகிய தரங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

குறித்த கட்டிடத்தில் சுமார் 12 வகுப்பறைகள் பராமரிக்கப்பட்டு வருவதுடன், அதில் சுமார் 600 மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

பெய்து வரும் கனமழையால் கட்டிடங்களின் பல பகுதிகள் சேதமடைந்ததால் பாடசாலைக்கு வர வேண்டாம் என அங்கு இயங்கி வரும் வகுப்பறைகளில் படித்துக் கொண்டிருந்த மாணவர்களுக்கு பாடசாலை நிர்வாகம் வாட்ஸ்அப் மூலம் தகவல் அனுப்பியுள்ளது.

குறித்த கட்டிடத்தை அவதானித்த பின்னர் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் விசாரணை நடத்தி கட்டிடத்தின் நிலை குறித்து அறிக்கை பெற்றுக்கொள்வது பொருத்தமானது என கண்டி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் தலைவர் இந்திக்க ரணவீர தெரிவித்துள்ளார்.

அதன்படி நேற்று (6) தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவன அதிகாரிகள் குழுவினர் பாடசாலைக்கு சென்று ஆய்வு செய்தனர்.

கட்டிடத்தின் நிலையை கண்காணித்து அறிக்கை கொடுக்கும் வரை வகுப்புகள் நடத்துவது ஆபத்தானது என கட்டிடத்தை பார்வையிட்ட மத்திய மாகாண கல்வி செயலாளர் மேனகா ஹேரத் குறிப்பிட்டார்.

மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுவதைத் தடுக்கும் வகையில், குறித்த கட்டடத்தில் உள்ள வகுப்புகளின் மாணவர்களை மாவில்மட ரிஷிகலா கல்லூரி மற்றும் மாவில்மட கல்லூரிக்கு மாற்றி வகுப்புகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.