கோட்டை ரயில் நிலையத்துடன் இணையும் மூன்று பேருந்து நிலையங்கள்: குறித்த மூன்று பேருந்து நிலையங்களும் இடமாற்றம் செய்யப்பட்டதன் பின்னர் வெற்றிடமாகும் பகுதியை வணிக நோக்கங்களுக்காக அரசாங்கம் பயன்படுத்த உள்ளது.

OruvanOruvan

Pettah Railway station

புறக்கோட்டை பிரதேசத்தில் மூன்று இடங்களில் காணப்படும் இலங்கை போக்குவரத்து மத்திய பேருந்து நிலையம் , பெஸ்டியன் மாவத்தை மற்றும் குணசிங்க புர தனியார் பேருந்து நிலையம் ஆகியவற்றை கோட்டை ரயில் நிலையத்தை ஒட்டி அமைத்து பல்வகை போக்குவரத்து மையமாக பராமரிக்க திட்டமிட்டு வருவதாக போக்குவரத்து அமைச்சின் செயலாளர் எம் . எம் . பீ .கே மாயாதுன்ன தெரிவித்தார்.

தற்போது மாகும்புர பல்வகை போக்குவரத்து நிலையம் இயங்கும் விதத்தில் பேருந்துகளை நிறுத்தும் வகையில் இந்த இடம் நிர்மாணிக்கப்படும் எனவும் செயலாளர் தெரிவித்தார்.

கொழும்பு நகரை அழகுபடுத்தும் திட்டத்தை அமுல்படுத்துவது மற்றும் பேரா ஏரி அபிவிருத்தித் திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வு தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் இது குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

இந்நிலையில் , கொழும்புக்கு வரும் பேருந்துகளை வேறு இடத்தில் நிறுத்திவிட்டு, புறப்படும் நேரத்தில் மட்டுமே பேருந்து நிலையத்திற்கு வந்து சேருவதாகவும், இதன் காரணமாக பயணிகளுக்கு வசதியாக புதிய பல்வகை நிலையத்தை நிர்மாணிப்பது குறித்து நகர அபிவிருத்தி அதிகார சபையுடன் கலந்துரையாடி வருவதாகவும் தெரிவித்தார்.

கோட்டை ரயில் நிலையத்துக்கு அருகில் உள்ள பேருந்து நிலையங்களை அமைத்ததன் பின்னர் நிலத்தை வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.

கொழும்பு நகரத்தை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் இந்த நிலங்களை தனியார் துறையுடன் இணைந்து அபிவிருத்தி செய்து முதலீட்டு திட்டங்களுக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கொழும்பு நகரை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் மேலும் பல திட்டங்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

கொழும்பு நகரில் உள்ள பாதுகாப்பற்ற மரங்களை அகற்றி, அதற்குப் பொருத்தமான மரங்களை மீண்டும் நட்டு, கொழும்பு நகரில் கைவிடப்பட்ட காட்டுக் கட்டிடங்களை இனங்கண்டு பராமரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.

மேலும், கொழும்பு மாநகரில் மழைநீர் வெளியேறுவதை முறைப்படுத்துவதற்கான செயற்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பான ஒழுங்குமுறை திட்டத்தை உருவாக்குவது தொடர்பிலும் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.