வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு; கடும் மழை, காற்று தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை: அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு மன்னாரிலிருந்து காங்கேசன்துறை, தொடக்கம் பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதால், இன்று (டிசம்பர் 02) பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.
இன்று காலை 5:30 மணியளவில் திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 380 கிலோ மீற்றர் தொலைவில் இந்த காற்றழுத்த தாழ்வு நிலைகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை (டிச.03) புயலாக மாறும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த அமைப்பு திங்கட்கிழமை (டிச.04) இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு அருகில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் இந்தியாவின் வட தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்பிறகு, இது ஒரு சூறாவளி புயலாக வடக்கு நோக்கி நகர்ந்து செவ்வாய்க்கிழமை தெற்கு ஆந்திரப் பிரதேச கடற்கரையை கடக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனவே, அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு மன்னாரிலிருந்து காங்கேசன்துறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளுக்குச் செல்ல வேண்டாம் என கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
இதற்கிடையில் ஏற்கனவே மேற்குறிப்பிட்ட கடல் பகுதிகளில் இருப்பவர்கள் உடனடியாக கரையோரங்களுக்கு திரும்பவும் அல்லது பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.