இந்தியாவை விடுத்து இலங்கையின் வெளிவிவகார கொள்கையை தீர்மானிக்க முடியாது; அமெரிக்காவில் அநுர உரை: உலகில் எந்த ஒரு நாடும் தனிமையில் வாழ முடியாது. அதிகார மோதல்கள் பலம் வாய்ந்த நாடுகளுக்கு இடையே காணப்படுகிறது.
இந்தியாவை விடுத்து இலங்கையின் வெளியுறவுக் கொள்கையை தீர்மானிக்க முடியாது என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுக்கு சென்றுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, அங்கு பொது நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
“இலங்கையின் அமைவிடம் இந்தியாவின் அதிகார மையத்தில் அமைந்துள்ளது. இதனால் இந்தியாவுடன் விரும்பியோ விரும்பாமலோ இணைந்து செயற்பட நேரிடும்.
எனினும், உலகின் எந்தவொரு அதிகாரத் தளத்திற்கும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பங்களிக்காத அணிசேரா வெளியுறவுக் கொள்கை எனது ஆட்சியில் பின்பற்றப்படும்.
உலகில் எந்த ஒரு நாடும் தனிமையில் வாழ முடியாது. அதிகார மோதல்கள் பலம் வாய்ந்த நாடுகளுக்கு இடையே காணப்படுகிறது. பொருளாதாரம், தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பத்தால் உலகம் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளது.
சக்தி வாய்ந்த நாடுகளுக்கு இடையே மோதல்கள் இருந்தாலும் அவை அதனை வெளியில் காட்டாமல் செயல்படுகின்றன.
அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே, ஒரு பொருளாதார மோதல் உள்ளது. அதற்கான சந்தையை கையகப்படுத்துவதில் முரண்பாடு உள்ளது.
இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. ரஷ்யா ஒரு பக்கமும் ஐரோப்பா இன்னொரு பக்கமும் மோதலில் ஈடுபட்டு வருகிறது. உலகில் பல்வேறு அதிகார மையங்கள் உள்ளன. இலங்கை ஒரு அதிகார மையமாக மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் தற்போது இல்லை.
அதிகார மையமாக இல்லாவிட்டாலும், உலக வரைபடத்தில் நாமும் இருக்கிறோம். அப்படியானால், முதல் வெளியுறவுக் கொள்கையானது எந்த அதிகாரத் தளத்திற்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ பங்களிக்காத அணிசேரா வெளியுறவுக் கொள்கையாக இருக்க வேண்டும்.
அரசியல் செய்ய எவரும் அமெரிக்கா வரவில்லை. பலர் தங்கள் குழந்தைகளின் கல்விக்காக அல்லது இலங்கையை விட பாதுகாப்பான நாட்டிற்காகவும் அல்லது பணி நிமித்தமாகவுமே வந்துள்ளனர்.
இங்குள்ள பலர் இதுவரை எங்களை சந்தித்ததில்லை. பலர் எங்களைச் சந்திக்க வருவது இதுவே முதல் முறையாக இருக்கலாம். மேலும் நீங்கள் அனைவரும் இதற்கு முன் சில அரசியல் பிரச்சாரத்திற்கு உதவி செய்திருக்கிறீர்கள்.
தலைவர்களை ஆட்சிக்கு கொண்டுவரவும், அரசாங்கங்களை ஆட்சிக்கு கொண்டுவரவும் பலர் உதவினார்கள். தனிப்பட்ட எதிர்பார்ப்புகளுக்காக அல்ல. ஆனால் அந்தத் தலைவர்களும் அரசாங்கங்களும் உங்கள் எதிர்பார்ப்புகளை சிதைத்துவிட்டன” என தெரிவித்தார்.