'இலங்கையின் இலவச சுற்றுலா விசா திட்டம்' - அமெரிக்கா நிராகரிக்கப்பட்டதன் பின்புலத்தில் அரசியல் நகர்வு: இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய உலக வல்லரசுகளுக்கு இலவச விசா திட்டத்தை இலங்கை அங்கீகரித்துள்ள போதிலும் இந்தப் பட்டியலில் அமெரிக்கா இல்லை.
இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான், இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு இலங்கை சுற்றுலா பயணிகள் விசா இன்றி நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதி வரை பரீட்சார்த்தமாக இத்திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
அமெரிக்காவுக்கு இலவச விசா இல்லை
இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய உலக வல்லரசுகளுக்கு இலவச விசா திட்டத்தை இலங்கை அங்கீகரித்துள்ள போதிலும் இந்தப் பட்டியலில் அமெரிக்கா இல்லை.
இலங்கைக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என இலங்கையின் சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தியா, சீனா, ரஷ்யாவுக்கு அடுத்தப்படியாக கனடா, ஜேர்மனி, அமெரிக்கா, மாலைத்தீவுகள் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருந்துதான் இலங்கைக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர்.
அமெரிக்கா இலங்கை மீது கவலை
2022ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளில் 7.2 வீதமானவர்கள் அமெரிக்கர்களாகும். என்றாலும், அமெரிக்காவை இலங்கை தமது இலவச விசா திட்டத்தில் இணைத்துக் கொள்ளவில்லை.
இதனால் அமெரிக்கா இலங்கை மீது கவலை அடைந்துள்ளதாக இராஜதந்திர தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் ஆண்டுகளில் சுற்றுலாப் பயணிகளின் வருகையை ஐந்து மில்லியனாக அதிகரிக்க எதிர்பார்க்கும் இலங்கை இத்திட்டத்தில் அமெரிக்காவை இணைத்துக்கொள்ளாமை பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. இலங்கைக்கு இந்த விடயம் சிலவேளை பாதிப்பாகக்கூட அமையலாம் என சுற்றுலாத்துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இலங்கை அரசியலில் அமெரிக்கா தலையீடு
அண்மைக்காலமாக இலங்கை அரசியலில் அமெரிக்கா தலையீடுகளை மேற்கொண்டுவருவதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகிறது.
இலங்கையின் உள்விவகாரங்கள் தொடர்பான கருத்துக்களை வெளியிடுவதை தவிர்க்குமாறு அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிற்கு தேசிய பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்றத்தின் துறைசார் கண்காணிப்புக் குழு பரிந்துரை செய்திருந்தது.
2022ஆம் ஆண்டு மே 9ஆம் திகதி அமெரிக்கத் தூதுவர் வெளியிட்டிருந்த சில கருத்துகளுக்கு கடுமையான எதிர்ப்புகள் வெளியாகியிருந்த நிலையில் இலங்கையின் உள்விவகாரங்களில் அமெரிக்க தூதுவர் தலையிடுவதை நிறுத்த வேண்டுமென தேசிய பாதுகாப்பு தொடர்பான பாராளுமன்றத்தின் துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, கடும் கண்டனத்தை வெளியிட்டிருந்தார்.
முக்கிய நபர்களின் விசாக்களை நிராகரித்த அமெரிக்கா
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உட்பட இலங்கையில் பல முக்கிய நபர்களின் அமெரிக்கா விசாக்கள் நிராகரிக்கபட்டிருந்தன.
அண்மையில்கூட ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் உதய கம்மன்பில ஆகியோரது அமெரிக்க விசா நிராகரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இலங்கை மீதான அமெரிக்காவின் தொடர்ச்சியாக அழுத்தங்கள்கூட இந்த பட்டியலில் அமெரிக்காவை இணைத்துக்கொள்ளாமைக்கான காரணமாக இருக்கலாம் என சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.