இலங்கையில் இருந்து இணையவழியில் கடன்? இந்தியாவில் தற்கொலை செய்துகொண்ட குடும்பம்: “தற்கொலை செய்த பின்னர், அவர்கள் உறவினர்களின் கையடக்கத் தொலைபேசிக்கு ஷில்பாவின் மார்பிங் செய்யப்பட்ட ஆபாச புகைப்படமும், குறுஞ்செய்தியும் சென்றிருக்கின்றன.“

OruvanOruvan

இந்தியாவின் கேரள மாநிலத்தில் நான்கு பேர் கொண்ட குடும்பம் ஒன்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸாரின் கவனம் இலங்கையில் இருந்து இயங்கிவரும் இணையவழியில் உடனடி கடன் வழங்கும் குழுவின் மீது திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த செப்டம்பர் 12ஆம் திகதி, 39 வயதான நிஜோ, அவரது மனைவி ஷில்பா (32) மற்றும் அவர்களின் குழந்தைகளான எபால் (7), ஆரோன் (5) ஆகியோர் தற்கொலை செய்து கொண்டனர்.

அவர்களின் உடல்கள் வீட்டில் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இறந்தவர்களில் ஒருவரின் ஆபாச படங்களை அவரது உறவினர்களுக்கு அனுப்ப பயன்படுத்திய எண்ணை பொலிஸார் கண்டுபிடித்தபோது இந்த தகவல் தெரியவந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸ் அதிகாரி ஒருவர் கருத்து வெளியிடுகையில்,

“இணையவழியில் கடன் வழங்கும் நிறுவனங்களில் ஷில்பா கடன் வாங்கியிருப்பதை நாங்கள் உணர்ந்தோம். அவற்றை திருப்பிச் செலுத்துவதில் அவளுக்கு சிரமம் ஏற்பட்டிருந்தது.

பின்னர், இந்த நிறுவனங்கள் ஷில்பா மற்றும் அவர்களது உறவினர்களுக்கு ஆபாசமான செய்திகளை அனுப்பியிருப்பது தெரியவந்துள்ளது.

அந்த கையடக்கத் தொலைபேசி எண்ணைப் பார்த்தபோது அது இலங்கையைச் சேர்ந்த ஒன்று என்பதை உணர்ந்தோம். உண்மையில் அந்த குழுக்கள் இலங்கையில் இருந்து செயற்பட்டு வருகின்றன.” என்று கூறியுள்ளார்.

முன்னதாக இருவரும் தற்கொலை செய்த பின்னர், அவர்கள் உறவினர்களின் கையடக்கத் தொலைபேசிக்கு ஷில்பாவின் மார்பிங் செய்யப்பட்ட ஆபாச புகைப்படமும், குறுஞ்செய்தியும் சென்றிருக்கின்றன.

அதில், “ஷில்பா கடன்பெற்ற தொகையான 9,000 ரூபாயை உடனடியாகச் செலுத்த வேண்டும். இல்லையென்றால், இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்கள் மூலம் அனைவருக்கும் அனுப்பப்படும்“ எனக் கூறப்பட்டிருந்தது.

ஷில்பா இணையவழி ஆப் மூலம் கடன் வாங்கியதாகவும், அதைச் செலுத்த முடியாததால் ஷில்பாவின் புகைப்படங்களை மார்பிங் செய்து இணையவழி ஆப் நிறுவனம் அனுப்பியிருப்பதாகவும் உறவினர்கள் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.