இஸ்ரேல் - பலஸ்தீன போரில் சிக்கியுள்ள இலங்கையர்கள் குறித்து அரசாங்கத்துக்கு அக்கறை இல்லை: நாட்டின் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஏற்படும் அனர்த்தங்கள் தொடர்பில் இதுவரையில் எவ்வித அறிக்கையும் வெளியிடப்படவில்லை.
இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்துக்கும் இடையிலான மோதல் சூழ்நிலை ஒரு மனித பேரவலமாகும். இது சர்வதேச பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. புவிசார் அரசியலில் மத்திய கிழக்கில் நிலவும் இந்த ஸ்திரமின்மை சர்வதேச பேரவலமாக விரிவடைவதை தடுப்பது அனைவரின் பொறுப்பாகும். இப்பகுதிகளில் பணிபுரியும் இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நாட்டிற்கு டொலர்களை ஈட்டித்தரும் எமது நாட்டு புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து தற்போதைய அரசாங்கத்திற்கு எந்த உணர்வும் இல்லை. தேர்தல் நேரத்தில்தான் இந்த புலம்பெயர் தொழிலாளர்கள் இவர்களுக்கு தேசிய வீரர்களாக மாறுகிறார்கள்.
இவ்வாறாக இந்நாட்டின் புலம்பெயர் தொழிலாளர்கள் சந்தர்ப்பவாதமாக பயன்படுத்தும் செயற்பாட்டை மேற்கொள்ளக் கூடாது. இச்சந்தர்ப்பத்தில் நாட்டின் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக முன் நின்று, அவர்களைப் பாதுகாப்பது எமது கடமை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறினார்.
பாராளுமன்றத்தில் இன்று (20) இடம்பெற்ற பலஸ்தீன-இஸ்ரேல் நெருக்கடி தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் சுட்டிக்காட்டியதாவது,
இந்த மோதல்களினால்,களனி பிரதேசத்தைச் சேர்ந்த அனுலா ஜயதிலக உயிர்நீத்துள்ளார். வென்னப்புவ பிரதேசத்தைச் சேர்ந்த யடவர பண்டார என்ற நபரும் காணாமல் போயுள்ளார். மற்றொரு இலங்கையர் காயமடைந்துள்ளார்.
வட பகுதியிலிருந்து தென் பகுதிக்கு நகரும் மக்களில் 17 இலங்கையர்கள் உள்ளனர். எகிப்தில் உள்ள ரபா எல்லைப் பகுதிக்குள்ளால் நுழையும் பட்சத்தில் அவர்களை எகிப்துக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜோர்தானில் இருந்து சட்டவிரோதமாக இஸ்ரேலுக்குள் நுழைந்த இரண்டு இலங்கைப் பெண்களும் ஜோர்தானிய எல்லைப் பாதுகாப்பு படையினரால் கைதுசெய்யப்பட்டாலும், அவர்கள் குறித்ததான தகவல்கள் இன்னும் தெரிவிக்கப்படவில்லை.
இஸ்ரேலில் 8000 இலங்கையர்கள் உள்ளதோடு அவர்களில் 1000 பேர் சட்டபூர்வமான முறையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக பயணிக்காதவர்கள் என வெளிநாட்டு பணியகத்திடம் தகவல்கள் இருந்தாலும்,சட்ட ரீதியாக சென்றிருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர்களும் நாட்டின் புலம்பெயர் தொழிலாளர்களே என்றபடியினால் அவர்கள் அனுப்பும் பணத்தால் நாட்டுக்கு நன்மை பயப்பதால் அவர்களும் பாதுகாக்கப்பட வேண்டும்.
இந்நேரத்தில், தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முறையான திட்டத்தை செயல்படுத்துவது எமது பொறுப்பு. இந்தப் போர் சூழ்நிலை உருவாகி பல நாட்கள் கடந்தாலும் சுற்றுலாத்துறை,எரிபொருள் விலை,இறக்குமதி மற்றும் ஏற்றுமதி ஆகியவற்றில் இந்த நெருக்கடியின் தாக்கம் குறித்து அரசாங்கம் எந்த கருத்தும் வெளியிடவில்லை. நாட்டின் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ஏற்படும் அனர்த்தங்கள் தொடர்பில் இதுவரையில் எவ்வித அறிக்கையும் வெளியிடப்படவில்லை.
இந்த மோதல் சூழ்நிலை காரணமாக கச்சா எண்ணெய் கொள்கலன் ஒன்றின் விலை 4 டொலர்களால் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக,நாட்டில் அனைத்து நடவடிக்கைகளுக்குமான செலவுகள் அதிகரிக்கும். இந்நிலையில், நாட்டில் எரிசக்தி விலையை கட்டுப்படுத்த அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கை என்ன? என அரசாங்கத்திற்கு சரியான புரிதல் இல்லை.
இந்த சம்பவம் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையலாம். எனவே, நமது நாடு இனம்,மதம்,சாதி வேறுபாடின்றி காக்கப்பட வேண்டும்.
தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் சம்பவங்கள் தொடர்பில் பல்வேறு அறிக்கைகள் வெளியிடப்படும் போது, அரசாங்கம் அறிக்கை ஒன்றை வெளியிடுமாறு கோரப்பட்ட போதிலும், இது தொடர்பாக இதுவரை அரசாங்கம் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.
இந்த துயர்கரமான சூழ்நிலையில் நமது நாட்டிற்கு ஏற்படும் விளைவுகள் குறித்து நாம் விரிவாகக் கையாள வேண்டும். நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு எடுக்க முடியுமான சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு தமது ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
பொதுமக்களைக் கொல்லப்படுவதை நிறுத்துமாறும்,குழந்தைகள், பெண்கள் மற்றும் தாய்மார்கள் கைது,மிலேச்சத்தனமான ரொக்கெட் மற்றும் வான்வழித் தாக்குதல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றே பலஸ்தீன மற்றும் இஸ்ரேலிய அரசாங்கங்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும், பயங்கரவாதம் மற்றும் அரச பயங்கரவாதம் ஆகிய இரண்டையும் வன்மையாகக் கண்டிப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.