இஸ்ரேலின் வட பகுதியிலுள்ள இலங்கையர்களை விழிப்புடன் இருக்குமாறு இஸ்ரேலுக்கான இலங்கை தூதரம் அறிவிப்பு: காஸாவின் வடக்கு பகுதியிலுள்ள மக்கள் 24 மணிநேரத்திற்குள் குறித்த பகுதியை விட்டு வெளியேறுமாறு இஸ்ரேல் அரசு அறிவிப்பு
இஸ்ரேலின் வடக்கில் அமைந்துள்ள நாடுகளான லெபனான் மற்றும் சிரியாவிற்கு அருகிலுள்ள நகரங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படும் சாத்தியங்கள் காணப்படுவதால், குறித்த பகுதிகளிலுள்ள இலங்கையர்கள் விழிப்புடன் பாதுகாப்பு அறிவுறுத்தல்களை பின்பற்றவேண்டும் என இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
லெபனான் மற்றும் சிரியாவின் எல்லைகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள நஹாரியா, அகோ, ஹைஃபா, திபெரியா, நசரித் ஆகிய பகுதிகளில் தாக்குதல் இடம்பெறும் அபாயம் இருப்பதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன் காரணமாக, குறித்த பகுதிகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறிவுறுத்தல்களை பின்பற்றி மருந்து, உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இருப்பில் வைத்திருக்குமாறும் இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் அறிவுறுத்திள்ளது.
இதேவேளை, காஸாவின் வடக்கு பகுதியிலுள்ள மக்கள் 24 மணிநேரத்திற்குள் குறித்த பகுதியை விட்டு வெளியேறுமாறு இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.