தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் போக்குவரத்து இடைநிறுத்தம் - ஒருபகுதி வழமைக்கு திரும்பும் சாத்தியம்: வீதி புனரமைக்கப்படும் வரை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு கோரிக்கை

OruvanOruvan

Southern Expressway landslide

மண்சரிவு அபாயம் காரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பின்னதுவ மற்றும் இமதுவ பகுதிக்கு இடையிலான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.

வீதி அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினர் இணைந்து வீதியை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நிலவும் சீரற்ற வானிலை காரணமாகாக நேற்றைய தினம் ஏற்பட்ட மண்சரிவினால் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 102 ஆவது கிலோ மீற்றர் பகுதியில் போக்குவரத்து நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டன.

இந்த நிலையில், நான்கு வீதிகளில் இரண்டு வீதிகள் புனரமைக்கப்பட்டு இன்று (12) பிற்பகல் போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக திறக்கப்படுமென வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் எல்.வீ.எஸ். வீரகோன் தெரிவித்துள்ளார்.

மேலும் வீதி புனரமைக்கப்படும் வரை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு அவர் சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, மண்சரிவு ஏற்பட்ட இடத்தை ஆய்வு செய்து தேவையான குறுகியகால மற்றும் நீண்டகால தீர்வுகள் வழங்கப்படும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் ஆசிறி கருணாவர்தன தெரிவித்துள்ளார்.

இதனிடையே, மண்சரிவு ஏற்பட்ட போது குறித்த இடத்தை பார்வையிடச் சென்ற பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் உட்பட ஏழு பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

6 பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் இவ்வாறு காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிதுள்ளார்.