உருளைக்கிழங்கின் விலையை கட்டுப்படுத்த முடியாது - விவசாய அமைச்சர்: மேலும் விலை அதிகரிக்கப்படும் நிலையில் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலையீட்டினால் விலையை குறைக்க முடியும்

OruvanOruvan

potato sri lanka

உள்நாட்டு சந்தையில் உருளைக்கிழங்கின் விலை அதிகரித்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு மீது விதிக்கப்பட்டுள்ள விசேட வர்த்தக வரி மேலும் நான்கு மாதங்களுக்கு நீடிக்கப்பட்ட நிலையில் இந்த விலை திகரிப்பு ஏற்பட்டுள்ளது.

முன்னதாக இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு கிலோ ஒன்றுக்கு 20 ரூபா விசேட வர்த்தக வரி விதிக்கப்பட்டிருந்தது.

இந்த விசேட வர்த்தக வரியில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு கிலோ ஒன்றுக்கு 50 ரூபா விசேட வர்த்தக வரி கடந்த மார்ச் மாதம் 8 ஆம் திகதி முதல் அமுல்படுத்தபட்டது.

குறித்த வரி ஆறு மாத காலத்திற்கு விதிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் நான்கு மாதங்களுக்கு நீடிப்பதற்கு நிதியமைச்சு தீர்மானம் மேற்கொண்டது.

இதன்படி, தற்போது இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு கிலோ ஒன்று 190 ரூபாவிற்கும் உள்நாட்டு உருளைக்கிழங்கு கிலோ ஒன்று 260 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில், சந்தையில் அதிகரித்துள்ள உருளைக்கிழங்கின் விலை அடுத்த சில நாட்களில் குறையுமென விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அத்துடன், உருளைக்கிழங்கிற்கு கட்டுப்பாட்டு விலையினை விதிக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும் மேலும் விலை அதிகரிக்கப்படும் நிலையில் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தலையீட்டினால் விலையை குறைக்க முடியும் எனவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.