அதிகரிக்கும் தொழுநோயாளர்கள் - சுகாதார மேம்பாட்டு பணியகம் எச்சரிக்கை: அறிகுறிகள் தாமதமாக தோன்றினாலும் தொழுநோயை சிகிச்சை மூலம் குணப்படுத்துவதற்கு 6 மாதம் தொடக்கம் ஒரு வருடங்கள் வரை தேவைப்படும்

OruvanOruvan

Lepers

கொழும்பு மாவட்டத்தின் மொறட்டுவை பிரதேசத்திலே அதிக எண்ணிக்கையிலான தொழுநோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட தேசிய வைத்தியசாலையின் மத்திய தொழுநோய் சிகிச்சை நிலையத்தின் பிரதம வைத்திய அதிகாரி சனத் தீபக் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதன்படி, இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 127 தொழுநோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொழுநோய்க்கான அறிகுறிகள் தோன்றுவதற்கு சுமார் 3 தொடக்கம் 5 ஆண்டுகள் வரை செல்லுமெனவும், குறித்த நோய் திடீரென தோன்றாது எனவும் வைத்திய அதிகாரி சனத் தீபக் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலைமையினை எந்தவொரு நபரும் பொருட்படுத்துவதில்லை எனவும் நீண்ட காலத்தின் பின்னரே சிகிச்சைபெற முனைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, அறிகுறிகள் தாமதமாக தோன்றினாலும் தொழுநோயை சிகிச்சை மூலம் குணப்படுத்துவதற்கு 6 மாதம் தொடக்கம் ஒரு வருடங்கள் வரை தேவைப்படுமென தேசிய வைத்தியசாலையின் மத்திய தொழுநோய் சிகிச்சை நிலையத்தின் பிரதம வைத்திய அதிகாரி சனத் தீபக் மேலும் தெரிவித்துள்ளார்.

தொழுநோய் என்பது தொற்றுநோயாக கருதப்படுவதுடன், இந்த நோய் கடுமையான தோல் அழற்சியை ஏற்படுத்துகிறது.

தொழு நோயின் தாக்கம் மற்றும் அதன் விளைவுகள் ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள மனிதர்களை பாதித்து வருகிறது.

சீனா, எகிப்து மற்றும் இந்தியாவின் பண்டைய நாகரீகங்களில் தொழுநோய் என்பது மருந்து இல்லாத, உரு சிதைக்கும், தொற்று நோயாக இருந்து வந்தது.

இதன்படி, தற்போது உலகளாவிய ரீதியில் ஆண்டுதோறும் 200,000 தொழுநோயாளர்கள் பதிவு செய்யப்படுவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், இலங்கையில் வருடாந்தம் சுமார் 2,000 தொழுநோயாளிகள் பதிவு செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.