இலங்கையில் கோழிப்பண்ணைகளை அமைக்க இந்திய நிறுவனங்கள் தயார் - சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஆய்வு: முட்டை மற்றும் கோழி இறைச்சி தேவைக்கு மேலதிகமாக காணப்படுமாயின் ஏற்றுமதி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு திட்டம்

OruvanOruvan

Mahinda-Amaraweera

இலங்கையில் கோழிப்பண்ணை மற்றும் முட்டை உற்பத்தி வியாபாரத்தினை முன்னெடுப்பதற்கு இந்தியாவிலுள்ள இரண்டு பிரபல நிறுவனங்கள் முதலீட்டுக்கான கோரிக்கைகளை முன்வைத்துள்ளன.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரிக்கையில் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அத்துடன், இலங்கையில் பால் உற்பத்தி கைத்தொழிலை ஆரம்பிப்பதற்கு இந்தியாவின் பிரபல நிறுவனமொன்று முன்வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், இலங்கையில் முட்டை மற்றும் கோழி இறைச்சியை உற்பத்தி செய்வதற்கான சந்தர்ப்பத்தினை இந்திய முதலீட்டாளர்களுக்கு வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் அமைச்சு தற்போது ஆராய்ந்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து முட்டை மற்றும் கோழி இறைச்சியை இறக்குமதி செய்வதை விட, வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு நாட்டில் இத்தொழில்களை தொடங்குவதற்கான வாய்ப்புகளை வழங்குவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இந்தியாவில் மட்டுமன்றி ஏனைய நாடுகளில் இருந்தும் இத்தொழில் தொடர்பான கோரிக்கைகள் முன்வைக்கப்படுமாயின் அதனை பரிசீலிப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான செயற்பாடும் மூலம் மக்களுக்கு குறைந்த விலையில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை வழங்குவதே தமது நோக்கமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முட்டை மற்றும் கோழி இறைச்சி தேவைக்கு மேலதிகமாக காணப்படுமாயின் ஏற்றுமதி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டியுள்ளதாக அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், எதிர்காலத்தில் தற்போதைய விலையை விட குறைந்த விலையில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை நுகர்வோருக்கு வழங்க முடியும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் தெரிவித்துள்ளார்.