வவுனியாவில் இரட்டைக் கொலை : தகாத உறவால் வந்த வினை: ஏரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து வாள்கள், ஒரு கோடாரி மற்றும் மூன்று இரும்பு குழாய்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

OruvanOruvan

The murdered couple

MFM.Fazeer

வவுனியா - தோணிக்கல் பகுதியில் வீடொன்றுக்குள் அத்து மீறி நுழைந்து கூரிய ஆயுதங்கள் கொண்டு தாக்கி, தீ வைத்து இருவரை கொலை செய்து மேலும் எண்மருக்கு படு காயம் ஏற்படுத்திய‌ சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஐவரையும் குற்றப் புலனய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் தடுப்புக் காவலில் வைத்து 48 மணி நேரம் விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

வவுனியா - தோணிக்கல் பகுதியில் கடந்த ஜூலை 23 ஆம் திகதி வீடொன்றுக்குள் நுழைந்த கும்பலொன்று வாள்வெட்டு தாக்குதல் நடத்தி வீட்டிற்கு தீ வைத்திருந்தது.

குறித்த வீட்டில் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது சந்தேகநபர்கள் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் 21 வயதான யுவதி மற்றும் அவரின் 35 வயதான கணவர் ஆகியோர் உயிரிழந்ததுடன் 08 பேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில், வவுனியா பொலிஸாரும் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினரும் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்தனர்.

இதன்போது இந்த சம்பவத்தின் பின்னணியில் போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புபட்ட விடயம் இருப்பதாக பல தரப்பினரும் சந்தேகம் வெளியிட்டனர்.

இந்நிலையில் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யும் பொறுப்பை சி.ஐ.டி.யினரிடம் கையளித்தார்.

அதன்படி சி.ஐ.டி.யின் மனிதப் படுகொலை குறித்த விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்தது.

இந்த சம்பவத்தில் தொடர்புபட்ட ஐவரை வவுனியா பொலிஸாரும் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினரும் இணைந்து நேற்று (31) கைது செய்தனர்.

குறித்த ஐந்து பேரையும் வவுனியா பொலிஸார் விசாரணைகளுக்காக சி.ஐ.டி.யினரிடம் கையளித்தனர்.

24, 27, 31, 33 வயதுடைய ஐவரே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தாக்குதலுக்கு அவர்கள் வருகை தந்த 3 மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது தெரியவந்த தகவலின் அடிப்படையில், குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் விசேட குழுவொன்று நேற்று (31) அப்பகுதியிலுள்ள ஏரியொன்றில் இந்தக் குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் ஆயுதங்கள் பலவற்றைக் கண்டுபிடித்துள்ளனர்.

அந்த ஏரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து வாள்கள், ஒரு கோடாரி மற்றும் மூன்று இரும்பு குழாய்கள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்டுள்ளவர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் ஒன்றின் கீழ் இந்த கொலைகளை புரிந்துள்ளமை இதுவரையிலான விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

போதைப் பொருள் வர்த்தகம், கொலையின் பின்னணியில் இல்லை என்பதும், கொலையின் பின்னணியில் தகாத உறவு விவகாரம் ஒன்று இருப்பதும் தற்போதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் 'ஒருவன் செய்திப்' பிரிவிடம் வெளிப்படுத்தின.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த 21 வயது யுவதி, கொல்லப்பட்ட 35 வயதான தன் காதலனுடன் வாழ்ந்து வந்துள்ளதாக கூறப்ப‌டும் நிலையில், குறித்த காதலனுக்கு பெண் கிராம சேவகர் ஒருவருடன் தொடர்பு இருந்துள்ளமை வெளிப்ப‌டுத்தப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் கொடுத்த ஒப்பந்தம் பிரகாரம் இக்கொலை சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளமை சி.ஐ.டி. விசாரணையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள், பின்னர் வைத்தியசாலையில் உயிரிழந்த 35 வயது இளைஞரை கொல்லும் நோக்குட‌ன் அங்கு சென்ற நிலையில், கொலையாளிகளைக் கண்டு 21 வயது யுவதி கூக்குரலிட்டதால், அவரையும் அவர்கள் கொலை செய்துள்ளதாக வெளிப்ப‌டுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே சந்தேக நபர்களிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிற‌ப்புக் குழு மேலதிக விசாரணைகளை முனெடுக்கும் நிலையில், ஒப்பந்தம் கொடுத்த நபரைக் கைது செய்யவும் பிரத்தியேக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.