13வது திருத்தச் சட்டம் தொடர்பான முடிவை எடுப்பதில் கட்சிகள் பின்வாங்க முடியாத நிலைமை: யோசனைகளை வழங்குவதற்கு கட்சி தலைவர்களுக்கு ஜனாதிபதி மேலும் ஒரு வார காலஅவகாசம் வழங்கியுள்ளார்.

OruvanOruvan

13Th Amendment and Parliament

13வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் தொடர்பான தீர்மானத்தை எடுக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை எனவும் நாடாளுமன்றத்திற்கே இருப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வக்கட்சி மாநாட்டில் அறிவித்ததை அடுத்து, அந்த திருத்தச் சட்டம் குறித்து அனைத்து கட்சிகளும் தீர்மானம் ஒன்றை எடுக்க நேரிட்டுள்ளதாக தெரியவருகிறது.

இது தொடர்பாக யோசனைகளை வழங்குவதற்கு கட்சி தலைவர்களுக்கு ஜனாதிபதி மேலும் ஒரு வார காலஅவகாசம் வழங்கியுள்ளார்.

இந்த யோசனைகளை ஆராய்ந்து நாடாளுமன்றத்தில் சமர்பிக்கும் அதிகாரத்தையும் ஜனாதிபதி, பிரதமர் தலைமையிலான உபகுழுவிற்கு வழங்கியுள்ளார்.

பிரதமர் தினேஷ் குணவர்தன, அமைச்சர்கள் விஜயதாச ராஜபக்ச, சுசில் பிரேமஜயந்த, பிரசன்ன ரணதுங்க ஆகியோர் இந்த உப குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

இந்த உபகுழு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் யோசனையை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் தீர்மானத்தை பெற்றுக்கொள்ள ஜனாதிபதி முடிவு செய்துள்ளார்.

எது எப்படி இருந்த போதிலும் மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்க தயாரில்லை எனவும் எவராவது பொலிஸ் அதிகாரங்களை கோரினால், அது அதிகார பரவலாக்கல் தொடர்பான செயற்பாடுகளை சீர்குலைக்கும் நடவடிக்கையாகவே இருக்கும் என்பது ஜனாதிபதியின் நிலைப்பாடாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.