இலங்கை ரயில்வே துறையில் தனியார் முதலீட்டாளர்களை இணைக்க திட்டம்: இலத்திரனியல் முறையில் ரயில் டிக்கெட்டுகளை வழங்குவதுடன், புறநகர் ரயில் நிலையங்களையும் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

OruvanOruvan

Train

இலங்கையில் இயங்கும் அனைத்து ரயில்களையும், ரயில்வே திணைக்களத்தின் கீழ் வைத்திருக்கும் அதேவேளை வெளிநாட்டு முதலீட்டாளர்களை ரயில்வே சேவைக்காக கொண்டுவருவதற்கு போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.

இலங்கையில் ரயில் சேவை வலுவாக இல்லாவிட்டாலும் இலங்கை மக்களுக்கு மின்சார ரயில் சேவையை வழங்கும் நோக்கில் இந்த திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைகளின் பிரகாரம் ரயில்வே திணைக்களத்தை மறுசீரமைத்து அதிகார சபையாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதுடன், சீன, இந்திய மற்றும் ஜப்பானிய முதலீட்டாளர்களுடனும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த வெளிநாட்டு நிறுவனங்களே அந்தந்த நாடுகளில் அதிநவீன ரயில் சேவைகளை வழங்குவதுடன், தற்போது ரயில்வே திணைக்களத்தின் கீழ் இயங்கும் ரயில்களுக்கு மேலதிகமாக, வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் பயன்படுத்தும் ரயில்களை இயக்கவும், அதன் மூலம் மேலும் மேம்படுத்தவும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம், இலத்திரனியல் முறையில் ரயில் டிக்கெட்டுகளை வழங்குவதுடன், புறநகர் ரயில் நிலையங்களையும் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ரயில்வே திணைக்களத்தின் கீழ், நாளாந்தம் சுமார் 370 ரயில் பயணங்கள் நடத்தப்படுவதுடன், பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து மூலம் திணைக்களத்திற்கு ஒரு பில்லியன் ரூபா மாத வருமானம் கிடைக்கின்றது.

எவ்வாறாயினும், ஒரு பில்லியன் ரூபா வருமானம் முழுமையாக எரிபொருளுக்கு செலவிடப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.