இலங்கையில் அறிமுகமாகும் இலத்திரனியல் முச்சரக்க வண்டி: இந்த வாகனத்தைப் பயன்படுத்துவது மற்றும் பராமரிப்பதற்கு குறைந்தளவு செலவீனமே ஏற்படுவதால் பயணிகளுக்கும் இது நேரடியான நன்மையை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

OruvanOruvan

Electronic tricycle

டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி (பிரைவட்) லிமிடட் நிறுவனம் பொதுப் போக்குவரத்துக்காக மாதிரி இலத்திரனியல் முச்சரக்க வண்டிகளைக் கொண்ட ஈ-ட்ரைவ் டக்ஸி சேவையை நேற்று அறிமுகப்படுத்தியுள்ளது.

புகை வெளியேற்றம் அல்லாத மற்றும் எரிபொருள்களில் தங்கியிருப்பதைக் குறைப்பதற்கு உதவும் வகையில் சுற்றாடலுக்கு நட்பான வகையில், இந்த ஈ. ட்ரைவ் டக்ஸி வடிவமைக்கப்பட்டுள்ளது.

டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி (பிரைவட்) லிமிடட் நிறுவனம் அறிமுகப்படுத்தும் இந்த ஈ-ட்ரைவ் திட்டமானது பயணிகளுக்கு செலவுச் சிக்கனமான போக்குவரத்து சாதனத்தை வழங்குவது மாத்திரமன்றி, இரைச்சல் குறைவான, சுமுகமான பயணத்தை பயணிகளுக்கு வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த வாகனத்தைப் பயன்படுத்துவது மற்றும் பராமரிப்பதற்கு குறைந்தளவு செலவீனமே ஏற்படுவதால் பயணிகளுக்கும் இது நேரடியான நன்மையை ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

OruvanOruvan

E-Drive Taxi

அத்தோடு, ஒழுக்கமான மற்றும் தொழில்முறை டக்ஸி சாரதிகள் அணியை உருவாக்கும் நோக்கத்துடன், ஈ-ட்ரைவ் டக்ஸி சேவையின் சாரதிகள் இந்த வாகனத்தை எப்படி செலுத்துகின்றனர் என்பது மட்டுமல்லாது, வீதிகள் மற்றும் வீதி நடைமுறைகள் குறித்த புத்தாக்கப் பயிற்சியையும் பெற்றுள்ளனர்.

ஈ-ட்ரைவ் டக்ஸி சேவையில் உள்ள சாரதிகளுக்கு சீருடை வழங்கப்பட்டிருப்பதுடன், ஏதாவது நிகழ்வுகள் அல்லது சாரதிகள் தொடர்பான பின்னூட்டங்களை வழங்குவதற்கான தொலைபேசி இலக்கங்களுடன் சாரதிகள் குறித்த விபரங்களும் வாடிக்கையாளர்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

இதற்கு மேலதிகமாக அனைத்து வாகனங்களும் நிறுவனத்தால் மையமாக கண்காணிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முச்சக்கரவண்டி முதற்கட்டமாக கொழும்பு மற்றும் அதனை அண்டியுள்ள புறநகர்களில் மாத்திரம் இயக்கப்படும்.

வெள்ளை மற்றும் பச்சை நிறம் கலந்த தனித்துவமான நிறத்தினால் இதனை இலகுவில் அடையாளம் கண்டுகொள்ள முடியும் என்பதுடன், திங்கள் முதல் சனிக்கிழமை ஆகிய நாட்களில் மு.ப 7 மணி முதல் பி.ப 7 மணிவரை இதன் சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

yogo டக்ஸி செயலி மூலமாகவும், 077 760 6077 என்ற பிரத்தியேக தொலைபேசி இலக்கம் மூலமாகவும் முன்பதிவு செய்து இவற்றின் சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த முன்னோடி திட்டத்தின் ஒரு பகுதியாக 20 பஜாஜ் முச்சக்கர வண்டிகளை டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி (பிரைவட்) லிமிடட் நிறுவனம் இவ்வாறு மாற்றம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.