பிக்குமார் தாமே நாட்டின் அரசர்கள் என நினைத்து செயற்படுகின்றனர்-சுரேஷ் பிரேமச்சந்திரன்: வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சட்டத்தை மீறி விகாரைகள் நிர்மாணிக்கப்படுவதுடன் புத்தர் சிலைகள் வைக்கப்படுகின்றன.
நாட்டின் பௌத்த பிக்குகள், ஜனாதிபதி,மாவட்ட செயலாளர்கள், நீதிமன்றம் ஆகிய எந்த தரப்பின் உத்தரவுகளையும் ஏற்றுக்கொள்ளாத நிலைமையேற்பட்டுள்ளது எனவும் தாமே நாட்டின் அரசர்கள் என நினைத்து அவர்கள் செயற்படுகின்றனர் எனவும் ஈபிஆர்எல்எப் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.
இராணுவத்தினரும் பொலிஸாரும் தம்மை மீறி செயற்பட மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் சில பிக்குமார் செயற்படுகின்றனர்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சட்டத்தை மீறி விகாரைகள் நிர்மாணிக்கப்படுவதுடன் புத்தர் சிலைகள் வைக்கப்படுகின்றன. சில பிக்குமார் வடக்கு,கிழக்கில் தாம் விரும்பியது போல் செயற்படுகின்றனர்.
எந்த அரச அதிகாரியின் உத்தரவுகளையும் ஏற்றுக்கொள்வதில்லை. பாதுகாப்புப பிரிவினர் உட்பட அதிகாரிகள் தம்மை மீறி செயற்பட மாட்டார்கள் என்ற நம்பிக்கை பிக்குமாருக்குள் ஏற்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்ட செயலாளரின் உத்தரவையும் மீறி நெல்சன் திரையரங்கத்திற்கு எதிரில் புத்தர் சிலையை வைக்க முயற்சித்தனர்.
நாட்டில் பல மதங்கள்,இனங்கள் மற்றும் கலாசாரங்களை கொண்ட மக்கள் வாழ்கின்றனர்.இது இந்திய-இலங்கை உடன்படிக்கையிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இப்படியான நிலைமையில் சில பௌத்த பிக்குகளின் செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது.
இவ்வாறான நடத்தைகள் தொடர்பாக ஜனாதிபதி பொருத்தமான தீர்மானங்களையும் நடவடிக்கைககளையும் எடுக்க வேண்டும்.
பொருத்தமான தீர்மானங்களை எடுத்தால் மாத்திரமே நாட்டின் அனைத்து மக்களின் உரிமைகளையும் பாதுகாக்க முடியும்.
எனினும் நாட்டில் எந்த இனத்தின் அடிப்படை உரிமைகளும் பாதுகாக்கப்படவில்லை.
அரசாங்கத்திற்கு எதிராக சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக கூறி அண்மையில் கொழும்பின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
மகிந்த ராஜபக்ச அல்லது பசில் ராஜபக்சவை பிரதமராக நியமிக்க திட்டமிடப்பட்டிருந்ததாகவும் திட்டம் சீர்குலைக்கப்படுவதை தடுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததாக சிலர் கூறுகின்றனர்.
கடனை மறுசீரமைக்கும் நடவடிக்கையின் போது மக்கள் மத்தியில் எதிர்ப்பு ஏற்பட்டால், அதனை தடுக்க இவ்வாறான பாதுகாப்பு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்.
ஜனநாயக ரீதியான போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை தடுத்து நிறுத்தவே அரசாங்கம் முயற்சித்து வருகிறது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது பதவியை பாதுகாக்கும் நோக்கிலும் அரசாங்கத்தின் பதவிக்காலத்தை பாதுகாக்கும் நோக்கிலும்
புதிய பிரதமரை நியமிக்கும் நோக்கிலும் இவ்விதமாக செயற்படுவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
மேலும் வடக்கு, கிழக்கில் காணிகள் கைப்பற்றப்படுவதை நிறுத்த வேண்டும். தொல்லியல் இடங்கள் என அடையாளம் காணப்படும் இடங்களில் புத்தர் சிலைகள் வைக்கப்படுவதை நிறுத்த வேண்டும்.
ஜனாதிபதியுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இதனை நாங்கள் வலியுறுத்தி இருந்தோம்.இந்த நடவடிக்கைகளை நிறுத்துமாறு உத்தரவிட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு முடியும்.
அர்த்தமுள்ள அதிகார பரவலாக்கம் பற்றி பேசுவதற்கு முன்னர் 13வது அரசியலமைப்பு திருத்தச்சட்டத்தில் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.
அதன் பின்னர் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் செல்ல முடியும். 13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி எவரது அனுமதியையும் பெற தேவையில்லை.
புதிய அரசியலமைப்புச் சட்டத்தை தற்போதைய நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாது. தற்போதைய ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்திற்கு அதற்கான ஆதரவு கிடைக்குமா என்பது சந்தேகம் எனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியுள்ளார்.