ஹர்திக் பாண்டியாவின் தலைமைத்துவத்தால் ஏமாற்றம்: மும்பை அணியில் இருந்து ரோஹித் ஷர்மா விலகல்?
ஹர்திக் பாண்டியாவின் தலைமைத்துவத்தால் ஏமாற்றமடைந்த மும்பை அணியின் நட்சத்திர வீரர் ரோஹித் ஷர்மா அணியை விட்டு வெளியேற முடிவுசெய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள மெகா ஏலத்தில் ரோஹித் ஷர்மா கலந்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
36 வயதான ஷர்மா 2011 ஆம் ஆண்டு மும்பை அணியில் இணைந்தார். ரோஹித் ஷர்மா இதுவரை 201 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 5110 ஓட்டங்களை குவித்துள்ளார.
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தலைவராக செயற்பட்டு ஐந்து முறை ஐபிஎல் கிண்ணத்தை வென்றுகொடுத்துள்ளார்.
ஐபிஎல் 2024 ஏலத்திற்கு முன் அவர் மும்பை அணியின் தலைமைப் பதவியில் இருந்து நீக்கப்பட்டார், அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா தலைவராக நியமிக்கப்பட்டார்.
எனினும், ஹர்திக்கின் தலைமை மீது ரோஹித் அதிருப்தி அடைந்துள்ளதாக பெயர் குறிப்பிடாத அணியின் சக வீரரை மேற்கோள்காட்டி இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதனால் அணிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளதுடன், நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை அணி மிக மோசமாக விளையாடி வருவதுடன், புள்ளிப் பட்டியலிலும் கடைசி இடத்தில் இருக்கின்றது.
இதனால் மும்பை அணி மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஆதாரத்தின்படி, இரண்டு வீரர்களும் முடிவுகளைப் பற்றி கடுமையாக வாதிடுவதாகவும், இது டிரஸ்ஸிங் அறையில் மோசமான சூழ்நிலையை உருவாக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 24 அன்று அகமதாபாத்தில் நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான முதல் ஐபிஎல் போட்டியின் போது மும்பை அணியின் வீரர்கள் பதற்றத்துடன் காணப்பட்டனர்.
ஹர்திக்கும் ரோஹித்தும் ஆட்டம் முழுவதும் அடிக்கடி சூடான விவாதங்களில் ஈடுபட்டனர். மும்பை அணியின் தலைவராக ஹர்திக் நியமிக்கப்பட்டதற்கு ரசிகர்களும் எதிர்வினையாற்றியுள்ளனர்.
தலைவராக அவர் எடுக்கும் தந்திரோபாயங்களை கிரிக்கெட் நிபுணர்களும், ரசிகர்களும் விமர்சித்து வருகின்றனர்.
இந்தப் பின்னணியில் நடப்பு ஐபிஎல் தொடருடன் மும்பை அணியில் இருந்து ரோஹித் ஷர்மா விலக முடிவு செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.