பந்து வீச்சுக்கு முன் தோனியின் கால்களில் விழுந்த பத்திரன?: பின்னணி ஆராயப்படுகின்றது

OruvanOruvan

Matheesha Pathirana

தற்போது நடைபெற்றுவரும் இந்தியன் பிரீமியர் லீக் (IPL 2024) போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிவரும் இலங்கை வீரர் மதீஷ பத்திரன இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் அன்பை அபரிமிதமாக பெற்று வருகிறார்.

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அதிலும் இளம்பெண்கள் மத்தியில் மதீஷ அதிக வரவேற்பை பெற்றுள்ளார்.

மதீஷ நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கடந்த வருடம் விளையாடியிருந்த நிலையில் இந்திய ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

தற்போது நடைபெற்றுவரும் போட்டிகளில், ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான முதல் போட்டியில் மதீஷ பத்திரன விளையாடவில்லை, எனினும் மார்ச் 26ஆம் திகதி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடினார்.

அதன்படி, 4 ஓவர்களில் 29 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

ஒரு இன்னிங்சுக்கு சராசரியாக 7.25 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.

துஷார் தேஷ்பாண்டே மற்றும் தீபக் சஹாருக்குப் பிறகு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மதீஷ மூன்றாவது சிறந்த பந்துவீச்சைப் பதிவு செய்தார்.

குறித்த போட்டியில், மதீஷ பிரதிநிதித்துவப்படுத்திய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 63 ஓட்டங்களால் வெற்றி பெற்ற போதிலும், போட்டியில், மதீவின் ஒரு அதிரடி நடவடிக்கையில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.

இது அண்மைய தினங்களாக சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசபட்டு வருகிறது.

OruvanOruvan

Matheesha Pathirana with Chennai Super Kings

மதிஷ பத்திரன ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த காரணம்

குறித்த போட்டியில் பந்துவீசுவதற்கு முன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் தலைவர் மகேந்திர சிங் தோனியின் காலில் விழுந்து மதீஷ பத்திரன ஆசிர்வாதம் பெறுவதைப் போன்ற காணொளி சமூக வலைதளங்களில் பரவலாகி வருகிறது.

அதன்படி, இந்தியன் பிரீமியர் லீக்கில் விளையாடும் வாய்ப்பை பெற்றுத் தந்த காரணத்தினால் ‘பந்து வீசுவதற்கு முன் தோனியின் ஆசிர்வாதம் பெற்ற மதீஷ பத்திரன’ என்ற வாசகத்துடன் காணொளி சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கியது.

இது மதீஷவின் ரசிகர்கள் மட்டுமன்றி “தல“ என செல்லமாக அழைக்கப்படும் தோனியின் ரசிகர்களையும் ஈர்த்து விட்டது.

எனினும் ,குறித்த சம்பவத்தின் போது இறுதி வினாடிகளில் மற்றொரு கமரா தடுப்பதால் அவர் உண்மையில் என்ன செய்கிறார்? என்பது தெளிவாக பதிவு செய்யப்படவில்லை.

முதல் பார்வையில், மதிஷ பத்திரன தோனியின் பாதங்களைத் தொட்டு ஆசிர்வாதம் வாங்குவதைக் காட்டுகிறது.

இதற்கு இந்திய சமூக ஊடகப் பயனாளர்கள் பலரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்திருந்தனர்.

உண்மையில் நடந்தது என்ன ?

இந்த காணொளி மீது உலகளாவிய ரீதியில் தீவிர கவனம் செலுத்தப்பட்டதால், இந்தியாவில் உள்ள முக்கிய செய்தி நிறுவனங்கள் காணொளியில் காட்டப்பட்டுள்ள காட்சியின் உண்மை நிலவரத்தை விசாரிக்க நடவடிக்கை எடுத்திருந்தன.

இந்தியாவின் முன்னணி செய்தி வழங்குநரான ஜீ நியூஸ் (Zee News) , இது தொடர்பாக உண்மைச் சரிபார்ப்பை (Fact check) மேற்கொண்டிருந்தது.

தோனியின் காலுக்கு அருகில் இருக்கும் பந்துவீச்சாளர்கள் பயன்படுத்தும் மார்க்கரை எடுக்க மதீஷ பத்திரன குனிந்திருப்பதைக் காணொளியை ஆய்வு செய்த பிறகு கண்டறிந்தனர்.

மேலும், பல செய்தி நிறுவனங்களும் மேற்கண்ட உண்மைகளை வெளியிட்டிருந்தன.

இதற்கிடையில், காணொளியில் உள்ள ஸ்லோ மோஷன் காட்சிகள் உண்மையான விடயத்தை ஓரளவு விளக்குவதாக அமைந்திருந்தன.

இந்தியாவில் இருந்து கிடைக்கும் அன்பு

மதீஷ இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் மட்டுமல்ல, கிரிக்கெட்டை விரும்பும் இளம் தரப்பினராலும் மதிக்கப்படுபவர் என்பதை சமீபத்தில் வெளியிடப்பட்ட காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் காட்டுகின்றன.

OruvanOruvan

மதீஷவைப் பற்றி.....

மதிஷ பத்திரன 2002ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ஆம் திகதி கண்டியில் பிறந்தார் மற்றும் தனது ஆரம்பக் கல்வியை கன்னோருவை ரணபிம ரோயல் கல்லூரியில் நிறைவு செய்தார்.

வேகப்பந்து வீச்சாளரான மதிஷ பத்திரன 2022 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானுடனான 20/20 போட்டி சுற்றுப்பயணத்திற்காக பெயரிடப்பட்ட இலங்கை அணியில் சேர்க்கப்பட்டார், அங்கு அவர் தனது தாய்நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பைப் பெற்றார்.

ஐபிஎல் போட்டியின் முதல் பந்திலேயே படைத்த சாதனை

2022ஆம் ஆண்டில், ஆடம் மில்னேவுக்கு பதிலாக சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பை பெற்ற மதீஷ பத்திரன தான் விளையாடிய முதல் போட்டியில் அனுப்பப்பட்ட முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்தியமை அனைவர் மத்தியிலும் பேசப்பட்டது.

குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஷுப்மான் கில்லின் விக்கெட்டை வீழ்த்தியபோது மதீஷவின் பெயர் சாதனைகளில் நுழைந்தது.