ஐ.பி.எல் வரலாற்றில் அதிக ஓட்டங்கள் குவித்து புதிய சாதனை: மும்பையை பந்தாடியது ஐதராபாத்

OruvanOruvan

ஐ.பி.எல் வரலாற்றில் ஒரு அணி பெற்றுக்கொண்ட அதிக கூடிய ஓட்ட எண்ணிக்கை என்ற சாதனையை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி படைத்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இன்றையப் போட்டியில் ஐதராபாத் அணி 277 ஓட்டங்கள் குவித்து சாதனைப் படைத்துள்ளது.

2024 டாடா ஐ.பி.எல் தொடரின் எட்டாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன.

பெங்களூரு அணியின் சாதனை முறியடிப்பு

ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறும் இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை அணி முதலில் பந்து வீச முடிவுசெய்திருந்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஐதராபாத் அணி 20 ஓவர்கள் நிறைவில் மூன்று விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 277 ஓட்டங்களை குவித்தது.

இது ஐ.பி.எல் வரலாற்றி அணி ஒன்று பெற்றுக்கொண்ட அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாகும்.

முன்னதாக இந்த சாதனை ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வசம் இருந்தது.

2013ஆம் ஆண்டு பெங்களூரு அணி புனே அணிக்கு எதிராக பெற்றுக்கொண்ட 263 ஓட்டங்களே இதுவரை ஐ.பி.எல் போட்டிகளில் பெற்றுக்கொண்ட அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாக இருந்தது வந்தது.

எனினும், அந்த சாதனை இன்றையப் போட்டியில் முறியடிக்கப்பட்டு புதிய சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது.

மும்பை பந்து வீச்சாளர்களை துவசம் செய்த ஐதராபாத் வீரர்கள்

மும்பை அணியின் அனைத்து பந்து வீச்சாளர்களையும் ஐதராபாத் அணியின் துடுப்பாட்ட வீரர்கள் துவசம் செய்திருந்தனர்.

ஆரம்பம் முதலே அதிரடியாக துடுப்பெடுத்தாடிய ஐதராபாத் அணி வீரர்கள் மும்பை அணிக்கு இமாலய வெற்றி இலக்கை நிர்ணயித்துள்ளனர்.

சன்ரைசர்ஸ் அணியின் டிராவிஸ் ஹெட், அபிசேக் சர்மா, ஹெய்ன்ரிச் கிளாசன் ஆகியோர் குறைந்த பந்துகளில் அரைச்சதம் கடந்தனர்.

டிராவிஸ் ஹெட் 62 ஓட்டங்களையும், அபிசேக் சர்மா 63 ஓட்டங்களையும், ஹெய்ன்ரிச் கிளாசன் 80 ஓட்டங்களையும் குவித்தனர்.

இன்றையப் போட்டியில் மொத்தம் 18 ஆறு ஓட்டங்களையும், 19 நான்கு ஓட்டங்களையும் ஐதராபாத் அணி அடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.