ஒரே போட்டியில் 523 ஓட்டங்கள் குவிப்பு, பந்துக்கு பந்து சிக்ஸர் மழை: MI vs SRH போட்டியில் பதிவான சாதனைகள்

OruvanOruvan

2024 டாடா ஐபிஎல் தொடரின் எட்டாவது போட்டி நடந்து முடிந்துள்ளது. இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 31 ஓட்டங்களால் மும்பை இந்தியன்ஸ் அணியை தோற்கடித்தது.

அத்துடன், புள்ளிப் பட்டியலில் சன்ரைசர்ஸ் அணி இரண்டு புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்தப் போட்டியின் போது ஒட்டு மொத்த டி20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனைகள் படைக்கப்பட்டதுடன், ஐபிஎல் வரலாற்றில் பதிவான முக்கிய சாதனைகள் முறியடிக்கப்பட்டு புதிய சாதனைகள் நிலைநாட்டப்பட்டன.

கருணை காட்டாத சன்ரைசர்ஸ் வீரர்கள்

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை அணி முதலில் பந்துவீச முடிவெடுத்தது. இதன்படி, ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக மயங்க் அகர்வால் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் களமிறங்கினர்.

மயங்க் அகர்வால் 11 ஓட்டங்களுடன் பெவிலியன் திரும்பினார். பின்னர் டிராவிஸ் ஹெட்டுடன், அபிஷேக் ஷர்மா இணைந்து மும்பை வீரர்களுக்கு கருணை காட்டாமல் பந்துகளை எல்லைக் கோட்டுக்கு விரட்டியடித்தனர்.

இருவரும் குறைந்த பந்துகளில் அரைச்சதம் கடந்தனர். டிராவிஸ் ஹெட் 24 பந்துகளில் 62 ஓட்டங்களையும், அபிஷேக் ஷர்மா 23 பந்துகளில் 63 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

ஹெய்ன்ரிச் கிளாசன் 34 பந்துகளில் 80 ஓட்டங்களை குவித்தார். இதன் மூலம் 20 ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி மூன்று விக்கெட்டுகளை மட்டும் இழந்து 277 ஓட்டங்களை குவித்தது.

இது ஐ.பி.எல் வரலாற்றில் ஒரு அணி பெற்றுக்கொண்ட அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாகும்.

இதனையடுத்து 278 என்ற இமாலய இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மும்பை அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 246 ஓட்டங்களை மட்டு பெற்று 31 ஓட்டங்களால் தோல்வியடைந்தனர்.

போட்டியின் ஆட்டநாயகன் விருதை அபிஷேக் ஷர்மா பெற்றுக்கொண்டார். மும்பை அணி நடப்பு ஐபிஎல் தொடரில் விளையாடி இரண்டுப் போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

50 ஓட்டங்களுக்கு மேல் விட்டுக்கொடுத்த பந்து வீச்சாளர்கள்

ஐபிஎல் போட்டியில் நான்கு பந்துவீச்சாளர்கள் 50க்கும் அதிகமான ஓட்டங்களை விட்டுக் கொடுத்த முதல் சந்தர்ப்பமும் இந்தப் போட்டியில் பதிவாகியது.

இதன்படி, மும்பை அணியின் குவேனா மபகா நான்கு ஓவர்கள் வீசி 66 ஓட்டங்களையும், ஜெரால்ட் கோட்ஸி நான்கு ஓவர்கள் வீசி 57 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தனர்.

சன்ரைசர்ஸ் அணியின் புவனேஷ்வர் குமார் நான்கு ஓவர்கள் வீசி 53 ஓட்டங்களையும், மயங்க் மார்கண்டே நான்கு ஓவர்கள் வீசி 52 ஓட்டங்களையும் விட்டுக்கொடுத்திருந்தனர்.

MI vs SRH போட்டியில் பதிவான முக்கிய சாதனைகள்

ஐபிஎல் வரலாற்றில் சன்ரைசர்ஸ் நான்காவது விக்கெட்டில் பெற்றுக்கொண்ட அதிகூடிய இணைப்பாட்ட ஓட்டம்

இந்தப் போட்டியில் நான்காவது விக்கெட்டுக்காக இணைந்த ஹென்ரிச் கிளாசென் மற்றும் ஐடன் மார்க்ரம் ஆகியோர் தங்களுக்கு இடையில் 116 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக்கொண்டனர்.

டி20 போட்டிகளில் அதிகமுறை பெற்றுக்கொண்ட 45 ஓட்டங்களுக்கு கூடிய இணைப்பாட்டம்

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் அணியின் துடுப்பாட்ட வீரர்கள் சிறப்பாக துடுப்பெடுத்தாடியிருந்ததுடன், இந்த போட்டியில் அந்த அணியின் வீரர்கள் நான்கு 45 ஓட்டங்களுக்கு கூடிய இணைப்பாட்டங்களை பதிவு செய்திருந்தனர்.

ஐபிஎல் வரலாற்றில் இதற்கு முன்னர் இது போன்ற நான்கு சந்தர்ப்பங்களில் ஒரே இன்னிங்சிஸ் 45 ஓட்டங்களுக்கு கூடிய இணைப்பாட்டங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அறிமுகப் போட்டியிலேயே அதிக ஓட்டங்களை விட்டுக்கொடுத்த வீரர்

மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில் 17 வயதான குவேனா மபகா நேற்றையப் போட்டியில் அறிமுகமாகியிருந்தார். நான்கு ஓவர்களை வீசிய அவர் 66 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார்.

ஐபிஎல் வரலாற்றில் அறிமுகப் போட்டி ஒன்றில் வீரர் ஒருவர் அதிக ஓட்டங்களை விட்டுக்கொடுத்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

முன்னதாக 2013ஆம் ஆண்டு மொஹாலியில் நடந்த பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான் போட்டியில் அறிமுகமாக மைக்கேல் நேசர் 62 ஓட்டங்களை விட்டுக்கொடுத்திருந்தார்.

அந்த மோசமான சாதனை நேற்றைய போட்டியில் முறியடிக்கப்பட்டது.

ஐபிஎல் வரலாற்றில் அதிகூடிய ஓட்ட குவிப்பு

நேற்றையப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் அணி 277 ஓட்டங்களை குவித்திருந்தது. இது ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணி பெற்றுக்கொண்ட அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாகும்.

முன்னதாக 2013 ஆம் ஆண்டு ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி புனே அணிக்கு எதிராக 263 ஓட்டங்களை குவித்திருந்தமையே அதிகூடிய சாதனை ஓட்டங்களாக இருந்தது.

18 சிக்ஸர்களை விளாசியது சன்ரைசர்ஸ் ஐதராபாத்

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் சிக்ஸர்களை விளாசியிருந்தது. எனினும், ஒரு இன்னிங்சில் அதிக சிக்ஸர்களை அடித்த அணி என்ற சாதனை ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வசமுள்ளது.

அந்த அணி 2013 ஆண்டு புனே அணிக்கு எதிரான போட்டியில் 21 சிக்ஸர்களை அடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

10 ஓவர்களுக்கு பிறகு பெற்றுக்கொள்ளப்பட்ட அதிகூடிய ஓட்டங்கள்

மும்பை அணிக்கு எதிரான போட்டியில் கடைசி 10 ஓவர்களில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்து 148 ஓட்டங்களை குவித்தது. இது ஐபிஎல் வரலாற்றில் கடைசி 10 ஓவர்களில் பெற்றுக்கொண்ட அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையாகும்.

முன்னதாக 2021 ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக மும்பை அணி கடைசி 10 ஓவர்களில் பெற்றுக்கொண்ட 131 ஓட்டங்களே இதுவரை சாதனையாக இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் வரலாற்றில் ஒரு அணியின் அதிவேக சதம்

நேற்றையப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஏழு ஓவர்களில் 100 ஓட்டங்களை கடந்து. இது அந்த அணியின் அதிவேக சதமாக பதிவாகியுள்ளது.

எனினும, 2014 ஆம் ஆண்டு ஆறு ஓவர்களின் பஞ்சாப் அணிக்கு எதிராக சென்னை அணி பெற்றுக்கொண்ட 100 ஓட்டங்களே முதலிடத்தில் உள்ளது.

ஐபிஎல் போட்டியில் அதிக பவுண்டரி எண்ணிக்கை (4s+6s)

நேற்றையப் போட்டியில் மொத்தம் 69 பவுண்டரிகள் அடிக்கப்பட்டிருந்தது. இதில் 38 ஆறு ஓட்டங்களும், 31 நான்கு ஓட்டங்களும் அடங்கும்.

இதன் மூலம் 2010 ஆண்டு சென்னை மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் அடிக்கப்பட்ட 69 பவுண்டரிகள் சமன் செய்யப்பட்டுள்ளது.

டி20 போட்டிகளில் பதிவான அதிகூடிய சிக்ஸர்கள்

நேற்றையப் போட்டியில் இரு அணிகளும் இணைந்து 38 சிக்ஸர்களை விளாசியிருந்தன. மும்பை அணி 20 சிக்ஸர்களையும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 18 சிக்ஸர்களையும் அடித்திருந்தன.

இது டி20 போட்டி வரலாற்றில் பதிவான அதிகூடிய சிக்ஸர்கள் ஆகும் என்பதுடன், ஐபிஎல் வரலாற்றில் ஒரு போட்டியில் பெற்றுக்கொண்ட அதிகூடிய சிக்ஸர்கள் என்பதும் குறப்பிடத்தக்கது.

ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் குவிப்பு

நேற்றையப் போட்டியில் இரு அணிகளும் இணைந்து 523 ஓட்டங்களை குவித்திருந்தது. இது டி20 வரலாற்றில் ஒரே போட்டியில் பெற்றுக்கொள்ளப்பட்ட அதிகூடிய ஓட்ட எண்ணிக்கை ஆகும்.

ஐபிஎல் வரலாற்றில் பெற்றுக்கொள்ளப்பட்ட அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையும் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் பெற்றுக்கொண்ட அதிகூடிய ஓட்டம்

278 என்ற இமாலய வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை அணி நேற்றைய போட்டியில் 246 ஓட்டங்களை குவித்திருந்தது. இது ஐபிஎல் வரலாற்றில் இரண்டாம் இன்னிங்ஸில் பெற்றுக்கொள்ளப்பட்ட அதிகூடிய ஓட்டங்களாகும்.

இந்தப் போட்டியில் மும்பை அணியின் முதல் துடுப்பாட்ட வீரர்களும் 20 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களை கடந்திருந்தனர்.

ஒரு அணியின் முதல் ஆறு வீரர்களும் 20 ஓட்டங்களை கடந்தது ஐபிஎல் வரலாற்றில் இது முதல் சந்தர்ப்பமாகும்.