ரெய்னாவின் தனித்துவமான சாதனையை முறியடித்த கோலி: மூன்றாம் இடத்தில் ரோஹித் சர்மா

OruvanOruvan

Virat Kohli

நடப்பு ஐ.பி.எல். தொடரில் எம்.சின்னசாமி மைதானத்தில் நேற்று இடம்பெற்ற ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் விராட் கோலி மற்றொரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டினார்.

இதன்போது சென்னை அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா டி20 போட்டிகளில் படைத்த தனித்துவமான சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார்.

துடுப்பாட்டத்தில் பெயர் போன விராட் கோலி தற்போது களத்தடுப்பிலும் புதிய சாதனை படைத்துள்ளார். இதன்படி, டி20 கிரிக்கெட்டில் அதிக பிடியெடுப்புகளை எடுத்த இந்திய வீரர் என்ற பெருமையை கோலி பெற்றுள்ளார்.

இதற்கு முன் கோலி மற்றும் ரெய்னா இருவரும் தலா 172 பிடியெடுப்புகளை எடுத்திருந்தனர். எனினும், நேற்றையப் போட்டியில் ஜோனி பேர்ஸ்டோவின் பிடியெடுப்பை எடுத்து ரெய்னாவின் சாதனையை கோலி முறியடித்துள்ளார்.

கோலி, ரெய்னாவை தொடர்ந்து இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மா 167 பிடியெடுப்புகளுடன் மூன்றாவது இடத்திலும், மனிஷ் பாண்டே மற்றும் சூர்யகுமார் யாதவ் முறையே 146 மற்றும் 136 பிடியெடுப்புகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் சகலதுறை வீரர் கீரன் பொல்லார்டு, டி20 கிரிக்கெட்டில் 362 பிடியெடுப்புகளை எடுத்ததன் மூலம் முதலிடத்தில் உள்ளார்.

தென்னாப்பிரிக்காவின் டேவிட் மில்லர் 290 பிடியெடுப்புகளுடன் இரண்டாம் இடத்திலும் டுவைன் பிராவோ, ஷோயப் மாலிக் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் முறையே 271, 225 மற்றும் 221 பிடியெடுப்புகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.