பழி தீர்க்குமா இலங்கை: பங்களாதேஷ் மண்ணில் அபார வெற்றி

OruvanOruvan

பங்களாதேஷ் அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 328 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது.

இந்தப் போட்டியில் இலங்கை அணி முதல் இன்னிங்ஸுக்காக 280 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

முதல் இன்னிங்ஸில் கமிது மெண்டிஸ் தனது முதல் டெஸ்ட் சதத்தை பதிவு செய்தார். அணித்தலைவர் தனஞ்சய டி சில்வாவும் சதம் அடித்தார்.

பின்னர் களம் இறங்கிய வங்கதேச அணி முதல் இன்னிங்ஸுக்கு 188 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

பந்துவீச்சில் இலங்கையின் விஷ்வா பெர்னாண்டோ 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

கசுன் ராஜித மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 418 ஓட்டங்களைப் பெற்றது.

இரண்டாவது இன்னிங்ஸில் கமிது மெண்டிஸ் 6 அபாரமான சிக்ஸர்கள் மற்றும் 16 பவுண்டரிகளுடன் 164 ஓட்டங்களைப் பெற்றார்.

தலைவர் தனஞ்சய டி சில்வா 2 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 108 ஓட்டங்களை குவித்தார்.

பந்துவீச்சில் பங்களாதேஷ் அணி சார்பாக ஹசன் மிராஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதன்படி பங்களாதேஷுக்கு 511 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாட களம் இறங்கிய பங்களாதேஷ் அணியால் 182 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது.

இலங்கை தரப்பில் கசுன் ராஜித 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதன்படி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1 - 0 என இலங்கை அணி முன்னிலை பெற்றுள்ளது.

இதேவேளை, ஒருநாள் தொடரை 2-1 பங்களாதேஷ் கைப்பற்றியது. இரண்டாவது மற்றும் இறுதிப்போட்டியில் இரு அணி வீரர்களுக்கும் இடையில் கடுமையான வாக்குவாதங்கள் ஏற்பட்டிருந்தமை கிரிக்கெட் உலகில் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியிருந்தது.

இதனால் டெஸ்ட் தொடரில் இலங்கை பங்களாதேஷை பழி தீர்க்குமா என ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 30ஆம் திகதி ஆரம்பமாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.