பிரம்மாண்ட தொடக்க விழாவுடன் 17ஆவது ஐ.பி.எல். போட்டி இன்று ஆரம்பம்: எதிர்ப்பார்பில் ரசிகர்கள்

OruvanOruvan

CSK VS RCB

இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபி.எல். 2024) 17ஆவது சீசனானது இன்று சென்னையில் அமைந்துள்ள சிதம்பரம் மைதானத்தில் கோலாகலமான தொடக்க விழாவுடன் ஆரம்பமாகிறது.

இந்திய நேரப்படி மாலை 6:30 மணிக்கு ஐ.பி.எல். தொடக்க விழா ஆரம்பிக்கும்.

தொடக்க விழாவில், ஒஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் தனது இசையால் ரசிகர்களை கவர்ந்தீர்க்கவுள்ளார்.

அவருடன் பின்னணி பாடகர் சோனு நிகாம், நடிகர் டைகர் ஷெராப் மற்றும் அக்‌ஷய் குமார் ஆகியோரும் விழாவுக்கு மேலும் உற்சாகத்தை அளிக்கவுள்ளனர்.

தொடக்கவிழாவின் பின்னர் ஆரம்பிக்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.

ஐ.பி.எல். போட்டி ஆரம்பிப்பதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்னர் இரு அணிகளும் மாற்றங்களை மேற்கொண்டுள்ளன.

அதில் ஒரு பகுதியாக எம்.எஸ். தோனி தலைவர் பதவியிலிருந்து தன்னை துறந்துக்கொண்டார்.

இளம் வீரரான ருதுராஜ் கெய்க்வாட்டிடம் தலைவர் பதவி ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புதிய தலைவரின் கீழ் சென்னை அணி இன்று களமிறங்கும்.

எனினும், ருதுராஜ் கெய்க்வாட் களத்தில் ஒரு வழிகாட்டியாக கருதப்பட்டாலும், அவருக்கு பின்னால் தோனியின் பங்கு போட்டிகளில் முக்கிய பங்கு வகிக்கும்.

தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங்கின் கருத்துப்படி, தோனி கடந்த ஆண்டை விட முழு உடற்தகுதியுடன் இருப்பதாகவும், இந்த சீசன் முழுவதிலும் அவர் விளையாடுவார் என்று எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார்.

மறுபுறம் விரோட் கோலி, ஜனவரிக்கு பின்னர் முதல்முறையாக கிரிக்கெட் பக்கம் திரும்பியுள்ளார்.

எதிர்வரும் டி20 உலகக் கிண்ணத்தில் இந்திய அணியில் விராட் கோலியின் இடம் குறித்து கேள்விகள் அதிகம் எழுந்துள்ளதால், இந்த ஆட்டத்தில் அவரது ஆக்ரோஷத்துக்கு பஞ்சம் இருக்காது என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 2008ஆம் ஆண்டு முதல் சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸை தோற்கடிக்கவில்லை.

சென்னையில் இரு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் 7 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது.

அதேநேரம், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு ஒரு ஆட்டத்தில் மாத்திரம் வெற்றி பெற்றுள்ளது.

ஒட்டுமொத்த ஐ.பி.எல். போட்டிகளில் இரு அணிகளும் இதுவரை 31 போட்டிகளில் மோதியுள்ளன.

அதில் சென்னை 20 போட்டிகளிலும், பெங்களூரு 10 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் எந்தவித முடிவின்றி கைவிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.