பழி வாங்க காத்திருக்கும் இலங்கைக்கு பேரடி: பங்களாதேஷ் டெஸ்ட்டில் ஹசரங்க நீக்கம்

OruvanOruvan

Wanindu Hasaranga

டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மீண்டும் திரும்புவதாக அறிவித்த வனிந்து ஹசரங்க, ஐ.சி.சி. யின் நடத்தை விதிகளை மீறிய குற்றச்சாட்டில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.

அதனால் பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இருந்து இலங்கையின் சகலதுறை வீரர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு ‍டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஹசரங்க, ஒருநாள் தொடரின் இழப்புக்காக பங்களாதேஷுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மீண்டும் திரும்பும் தீர்மானத்த‍ை வெளியிட்டார்.

இந்த அறிவிப்பு வெளியான சிறிது நேரத்திலேயே இலங்கை நட்சத்திரம் ஹசரங்கவுக்கு எதிரான சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தின் குறித்த தடை உத்தரவு வந்துள்ளது.

அண்மையில் முடிவடைந்த பங்களாதேஷுக்கு எதிரான ஒருநாள் தொடரின் மூன்றாவது ஆட்டத்தின் போது, ​​"சர்வதேச போட்டியின் நடுவரின் முடிவுக்கு கருத்து வேறுபாட்டினை" ஹசரங்க வெளிப்படுத்தியது கண்டறியப்பட்டது.

இதற்காக ஐசிசி நடத்தை விதிகள் மற்றும் வீரர்களுக்கான 2.8 விதியை மீறியதாக ஹசரங்கா குற்றம் சாட்டப்பட்டார்.

ஹசரங்க அவரது குற்றத்திற்காக போட்டியின் 50 சதவீத அபராதம் மற்றும் மூன்று குறைபாடு புள்ளிகளைப் பெற்றார்.

இது கடந்த 24 மாத காலப்பகுதியில் அவரது மொத்த குறைபாடு புள்ளிகளை எட்டாக உயர்த்தியது.

ஏற்கனவே கடந்த மாதம் தம்புள்ளையில் ஆப்கானிஸ்தானுடனான மூன்றாவது டி20 போட்டியில் ஹசரங்க மூன்று குறைபாடு புள்ளிகளை பெற்றார். இது அவரது மொத்த குறைப்பாட்டு புள்ளியை எட்டாக கொண்டு வந்தது.

இதைத் தொடர்ந்து, பங்களாதேஷுக்கு எதிரான இரண்டு டி20 போட்டிகளில் விளையாட அவர் இடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

தற்போதைய குறைப்பாட்டு புள்ளியுடன் அவர் மொத்தமாக எட்டு புள்ளிகளை பெற்றுள்ளார்.

ஐசிசி விதிகளின் படி, நான்கு குறைப்பாடு புள்ளிகள் இரண்டு டெஸ்ட் அல்லது நான்கு ஒருநாள் அல்லது டி20 போட்டிகளில் இருந்து தடை செய்யப்படுவதற்கு சமமாகும்.

எவ்வாறெனினும், ஹசரங்க தற்சமயம் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் கீழ் இடம்பெறும் பங்களாதேஷுடனான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் வாய்ப்பினை இழந்துள்ளார்.