16 வருட கால கனவு நனவானது: டெல்லியை எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சம்பியனான பெங்களூரு

OruvanOruvan

RCB WPL 2024 title

2024 மகளிர் பிரீமியல் லீக்கின் (WPL) இறுதிப் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்திய, பெங்களூரு ரோயல் சேலஞ்சர்ஸ் (RCB) அணியானது 16 வருட கால கனவினை நனவாக்கியது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு புது டெல்லியில் அமைந்துள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது மகளிர் ஐ.பி.எல். சீசனின் இறுதிப் போட்டியில் டெல்லி அணியும் பெங்களூரு அணியும் மோதின.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியானது, 18.3 ஓவர்களை மாத்திரம் எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

டெல்லி சார்பில் அணித் தலைவர் மெக் லானிங் 23 ஓட்டங்களையும், ஷஃபாலி வர்மா 44 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.

பந்து வீச்சில் பெங்களூரு சார்பில் சோஃபி டெவின் 5 விக்கெட்டுகளையும், ஸ்மிருதி மந்தனா 3 விக்கெட்டுகளையும் அதிகபடியாக எடுத்தனர்.

பின்னர், இலகுவான இலக்கினை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு 19.3 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 115 ஓட்டங்களை குவித்து வெற்றி இலக்கினை கடந்தது.

ஓட்ட இலக்கினை துரத்தலில், மந்தனா மற்றும் சோஃபி டிவைன் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு நிலையான 49 ஓட்டங்களை பெங்களூரு அணிக்காக குவித்தனர்.

பின்னர் 27 பந்துகளில் 32 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில், ஒன்பதாவது ஓவரில் சோஃபி டிவைன், ஷிகா பாண்டேவின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

பின்னர், அணித் தலைவர் மந்தனாவும் 15 ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் 31 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இறுதியாக எல்லிஸ் பெர்ரியும், ரிச்சா கோஷும் ஜோடி சேர்ந்து துடுப்பெடுத்தாட பெங்களூரு அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் இந்தியன் பிரீமியர் லீக் அரங்கில் பெங்களூரு ரோயல் செலஞ்சர்ஸ் அணி, தனது 16 ஆண்டுகால காயம் மற்றும் ஏமாற்றத்தை ஒரு உற்சாகமான வெற்றியுடன் துடைத்து, முதல் பட்டத்தை வென்றது.

பட்டத்தை வென்ற உணர்வு இன்னும் அடங்கவில்லை

தனது அணியின் முதல் மகளிர் பிரீமியர் லீக் பட்டத்தை வென்றதைத் தொடர்ந்து, ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணித் தலைவர் ஸ்மிருதி மந்தனா,

தொடக்க சீசனில் மோசமான ஆட்டம் தனக்கும் அணிக்கும் நிறைய கற்றுக் கொடுத்ததாகக் கூறினார்.

மேலும், பட்டத்தை வென்ற உணர்வு இன்னும் அடங்கவில்லை என்றும், அதை வெளிப்படுத்த சரியான வழியைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறினார்.

OruvanOruvan

RCB WPL 2024 title

கோலி மந்தனாவுக்கு வாழ்த்து

வெற்றியின் பின்னர், உடனடியாக மந்தனாவுடன் வீடியோ தொலைபேசி உரையாடலை மேற்கொண்ட விராட் கோலி, அவருக்கும் சம்பியம் பட்டம் வென்றி மகளிர் அணிக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அந்த வீடியோ சமூக தளங்களில் தற்சமயம் வைரல் ஆகி வருகிறது.

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகள் 2008 இல் தொடங்கியதில் இருந்து ஒவ்வொரு சீசனிலும் கோலி, ஆர்சிபிக்காக விளையாடி வருகிறார்.

மேலும் 2009, 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில் மூன்று இறுதிப் போட்டிகளை எட்டிய போதிலும், அவர்களால் கிண்ணத்தை கைப்பற்ற முடியாது போனமையும் குறிப்பிடத்தக்கது.